பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரமும் வெளியாகி இருக்கிறது. இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாஜக நிர்வாகிகள் மீது அங்கொன்று இங்கொன்றுமாக பாலியல் புகார்கள் வரத்தொடங்கியுள்ளன. விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதனும் பாலியல் புகாரில் சிக்கினார். கண்டாச்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த மாவட்ட பாஜக மகளிரணி நிர்வாகி காயத்திரி என்பவர், தனக்கு மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, கலிவரதன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ரூ.5 லட்சம் வாங்கிக் கொண்டதாகப் புகார் கூறினார்.
அதேபோல், கலிவரதன் தங்களை ஏமாற்றிவிட்டதாக இரண்டு பெண்கள் சாபம் விடும் ஆடியோவும் வெளியானது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 22-ந் தேதி வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், கே.டி. ராகவனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் கலிவரதன் மீது புகார் கூறிய காயத்திரி என்ற பெண் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே, கடந்த ஜுன் மாதம் 23-ந் தேதி, ‘கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம்‘: தமிழக பா.ஜ., தலைவர்களை வறுத்தெடுத்த சி.டி.ரவி!’ என்ற தலைப்பில் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கே.டி. ராகவன் அறிக்கை வெளியிட்டிருந்தார். தினமலர் நாளிதழை எதிர்த்து பாஜக–வினர் போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில், தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சிலரிடம் கே.டி. ராகவன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக பாஜக உறுப்பினரும், பத்திரிகையாளரும், யு டியூபருமான மதன் ரவிச்சந்திரன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வீடியோ ஆதாரத்தையும் அவர் இணைத்துள்ளார். மாநில தலைவர் அண்ணாமலையின் அனுமதி பெற்றே வீடியோ வெளியிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதே நேரம் பாஜக–வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோவை வெளியிட அண்ணாமலை அனுமதி கொடுத்ததை பாஜக–வினர் உள்பட பலரும் பாராட்டுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதையடுத்து கட்சிப் பதவியை கே.டி. ராகவன் ராஜினாமா செய்துள்ளார். அதேநேரம், மேலும் பல பாஜக–வினரைப் பற்றிய தகவல்களும் இருப்பதாக மதன் கூறியிப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இதேபோல், பாலியல் வழக்கில் கைதான சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் சொத்துக்களை கே.டி.ராகவன் கைப்பற்ற முயற்சிப்பாக, சிவசங்கர் பாபாவின் சீடர் நடிகர் சண்முகராஜன் குற்றம்சாட்டியிருந்தார்.
இப்படி அடுத்தடுத்த புகாரில் கே.டி. ராகவன் சிக்கியுள்ள நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத பாஜக நிர்வாகி ஒருவர், கே.டி. ராகவன் தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தவறு என தெரிந்தபிறகு, கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருக்காது. ஆனால், இந்த விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரனின் நேர்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இதுநாள் வரை திமுக–வை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்த அவர், பாதுகாப்புக்காகவே பாஜக–வுக்கு வந்தார். அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. எனவே, வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முக்கிய கட்சியின் அஜெண்டாவாகவே அவர் பாஜக–வினரை குறிவைக்கிறாரோ என தோன்றுகிறது. ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், கோடநாடு வழக்கை தூசு தட்டி அதிமுக–வின் வாயை அடைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதேபோல, பாலியல் புகாரை கிளப்பி பாஜக–வின் வாயை அடைக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry