சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், “ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் கட்டாயம் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.
Also Read : அரசு ஊழியர்களை பழிவாங்கும் திமுக அரசு! வட்டார வள அலுவலர்களை மீண்டும் பணியமர்த்த சீமான் வலியுறுத்தல்!
சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி பாரம்பரியம், கோயில் மரபு மற்றும் வழக்கத்துக்கு உட்பட்டே அபிஷேகம், ஆராதனைகளை மேற்கொள்ள அர்ச்சகர்களை நியமிக்க முடியும். ஆனால் இந்த விதிகளை கடைபிடிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளனர்” என வாதிட்டார்.
அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன், “ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் உயர் நீதிமன்றம் குழு ஏற்கெனவே அமைத்துள்ளது. அந்தக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும் வரை, ஆகம விதிகளைக் கடைப்பிடிக்கும் கோயில்களின் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில், கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களை நியமிக்க சட்டத்தில் வழிவகை உள்ளதால், அதற்கு அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார்.
Also Read : பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!
இந்த வழக்கில், நீதிபதி இன்று பிறப்பித்த தீர்ப்பில், ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களின் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச்சான்றின் அடிப்படையில் கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களை நியமிக்கும் அரசின் சட்டத்தை ஏற்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், கோயில்களின் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. கோவில் அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்தப் பங்கும் இல்லை. குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம். அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Featured Videos from VELS MEDIA
கோயிலுக்கு பின்னணியில் உள்ள அறிவியல்|Science behind Temples
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry