சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து! 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

0
30

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரையும், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அட்டவணையில் சில மாற்றங்களை செய்தும், சில பாடங்களுக்கான தேர்வுகளை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

நாடு முழுவதும் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இதுகுறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வித்துறை செயலாளர், மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகமும், சிபிஎஸ்இ-ம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன்1ம் தேதி ஆய்வு நடத்தி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை எந்த வகையில் வழங்குவது என்பது பற்றி சிபிஎஸ்இ முடிவு செய்யும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry