சிவகங்கை மாவட்டத்தில் 9-வது சமத்துவபுரம்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

0
268

சிவகங்கை மாவட்டம், கோட்டை வேங்கைப்பட்டியில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை திறந்த வைத்து, சமத்துவபுர வளாகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையினையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பெயரில் மறைந்த முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும். மறைந்த முதல்வர் கருணாநிதியால், சிவகங்கை மாவட்டத்தில் 9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு, 8 சமத்துவபுரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. 9-வது சமத்துவபுரமாக 2010-2011 ஆம் நிதியாண்டில் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் சமத்துவபுரம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த சமத்துவபுரம் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் 12.253 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இச்சமத்துவபுரத்தில் 100 வீடுகள், தலா ரூ.1.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து பார்வையிட்ட தமிழக முதலமைச்சர், பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கி, அவர்களுடன் உரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கேஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார், எஸ்.மாங்குடி, ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry