ஹெல்த் மிக்ஸ் ஊழல்? பொய்யை அடுக்கும் அமைச்சர்கள்! பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

0
326

கர்ப்பிணி பெண்களுக்கு ஹெல்த் மிக்ஸ் வழங்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பொய்யான தகவல்களைத் தந்து உண்மையை மறைத்துள்ளதாக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் மற்றும் பால்வளத்துறை செயலாளர் திரு. ஜவஹர், ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. சுப்பையன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ஒரு பொய்யை மறைக்க அடுக்கடுக்கான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது அப்பட்டமாக பல்லிளித்துள்ளது.

“ஆவின் ஹெல்த் மிக்ஸ்” என்பது சிறுதானியங்கள், தானிய பயிர்கள், பால் பவுடர் சேர்த்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும், இது அனைத்து வயதினருக்கும் சத்துமாவு போன்ற கலைவையாகும் எனவும், “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானத்திலேயே அது இடம்பெற்றுள்ளதாக இல்லாத ஒரு தகவலையும் சேர்த்து அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

அவர் பேசிய தவறான தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களும் வழிமொழிந்து இவ்விவகாரத்தில் தங்கள் மீதான நம்பகத்தன்மையை இழந்து விட்டனர். மேலும் சட்டமன்றத்தில் பால்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 36 அறிவிப்புகள் அடங்கிய 37 பக்க கையேட்டிலோ அல்லது 154 பக்கம் கொண்ட பால்வளத்துறையின் கொள்கை விளக்க குறிப்பேட்டிலோ எந்த இடத்திலும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சொன்ன தகவல் இடம்பெறவில்லை.

அதுமட்டுமன்றி “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” தயாரிப்பு தொடர்பாக பால்வளத்துறை சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் வெளியிடப்பட்டது ஏப்ரல்-13ம் தேதி தான் எனும் போது, அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பு தொடர்பாக அதற்கு ஒரு மாதத்திற்கு முன் (மார்ச்) திட்டக்கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆவின் பொதுமேலாளர் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” குறித்து எப்படி எடுத்துரைத்தார்?,

உற்பத்தியே செய்யப்படாத பொருளை வைத்து திட்டக்கமிஷன் கூட்டத்தில் விவாதம் நடத்தி அதனை அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பில் இணைக்க ஒப்புதல் அளித்து 8 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு பட்டியலில் Pro PL ஹெல்த் மிக்ஸை நீக்கி விட்டு, ஆவின் ஹெல்த் மிக்ஸை சேர்த்தது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுமத்திய ஊழல் குற்றச்சாட்டை மறுக்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, அதில் அவசரகதியில் எழுதப்பட்ட திரைக்கதை, வசனத்தை சுகாதாரத்துறை அமைச்சரும், பால்வளத்துறை அமைச்சரும் படித்துள்ளதோடு, அதற்கு பால்வளத்துறை செயலாளர் ஜவஹர் அவர்களும் சிறந்த முறையில் ஒத்துழைத்துள்ளார்.

சு.ஆ. பொன்னுசாமி

எனவே ஆவின் ஹெல்த் மிக்ஸ் தொடர்பான அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியிடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆவின் டெய்ரி ஒயிட்னர் எனப்படும் பால் பவுடரை ஆவின் ஹெல்த் மிக்ஸ் எனக் கூறி திட்டக்கமிஷன் முன் பரிந்துரை செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொணருவதுடன், வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக்கொள்வதாக சு.ஆ. பொன்னுசாமி கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry