ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு தண்டனை! அச்சத்தில் ஈரான் சன்னி பிரிவு சிறுபான்மையினர்!

0
255

ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு ஈரான அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இதுபற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ வாய் திறக்காத நிலையில், நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (Iran Human Rights – IHR) இதனை அம்பலப்படுத்தி உள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 12 பேரும், ஈரானின் மதச் சிறுபான்மையினரான பாலுச் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த திங்கள்கிழமையன்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ள சிஸ்டான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜகேதான் சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலுச் சிறுபான்மையின மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். அங்கு ஷியா முஸ்லிம்கள் தான் ஆதிக்க சக்தியினர்.

மரண தண்டனைக்கு உள்ளான சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 12 பேரில் 6 பேர் போதைப் பொருள் கடத்தலுக்காகவும் 6 பேர் கொலைக்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். அவர் கணவரை கொலை செய்ததாக கைதானவர்.

ஈரானில், இதுபோன்ற மரண தண்டனைகள், இன – மத சிறுபான்மையினரான வடமேற்கில் உள்ள குர்தூஸ், தென்மேற்கில் உள்ள அரபுகள் மற்றும் தென் கிழக்கில் உள்ள பாலுச் இனத்தவரை குறிவைத்தே நடத்தப்படுகிறது என்று ஈரான் மனித உரிமைகள் அமைப்பான IHR தெரிவிக்கிறது. சர்வதேச பொது மன்னிப்பு சபையின் அறிக்கையின்படி 2021ல் ஈரானில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry