அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! புரோக்கராக செயல்படும் மூதாட்டி! போலீஸிடம் சிக்கிய தம்பதி!

0
63

பிறந்த மூன்று நாட்களேயான குழந்தையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்திச் சென்ற தம்பதியினரை ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். கண்காணிப்பு குறைபாடே திருட்டுக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பலந்தை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி சுஜாதாவுக்கு மூன்று நாட்களுக்கு முன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறு பிரிவுக்குச் சென்று அந்தக் குழந்தையை திருடிக்கு கொண்டு இருவர் தப்ப முயன்றுள்ளனர்.

Also Read : நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!

குழந்தை காணவில்லை என்பதை உடனடியாக உணர்ந்த சுஜாதா கூச்சல் போட்டுள்ளார். குழந்தையைத் திருடிய தம்பதி, மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறி பேருந்து நிலையத்திற்கு செல்ல முற்படும்போதே, சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், குழந்தையைத் திருடி வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக விஷ்ணுகாந்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், குழந்தையை திருடிச்சென்ற தம்பதியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர்களது பெயர் ராமு – சத்யா என்பது தெரியவந்தது. மகப்பேறு வளாகத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்ததாகவும், குழந்தையை வாங்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனை வளாகத்தைவிட்டு சென்றுவிட வேண்டும் என அந்த மூதாட்டி கூறியதாகவும் போலீஸாரிடம் சத்யா தெரிவித்துள்ளார். அந்த மூதாட்டி யார்? குழந்தையை திருடி விற்கும் புரோக்கராக அவர் செயல்படுகிறாரா? ராமு – சத்யா தம்பதியின் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார்? என்பதை போலீஸார் விசாரிக்கின்றனர். மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உரிய கண்காணிப்பு இல்லாததே, குழந்தையை எளிதாக திருட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry