ஏடிஎம்களில் பணம் தீர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று, அனைத்து வங்கிகள் மற்றும் வைட் லேபிள் ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின் ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஏடிஎம்களில் பணம் நிரப்பாததற்கான அபராதத் திட்டத்தை (Scheme of Penalty for non-replenishment of ATMs) ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாதத்திற்கு 10 மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்–ல் பணம் இல்லாமல் இருந்தால், அந்த குறிப்பிட்ட ஏடிஎம்–ன் வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று RBI கூறியுள்ளது.
அதன்படி 2021ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல், ஒரு வங்கி தங்கள் ஏடிஎம்களில் பணம் இருப்பதை கண்காணிக்காமல் போனாலும் மற்றும் ஏடிஎம் மெஷினில் பணம் இல்லாமல் போனாலும், அந்த குறிப்பிட்ட வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அபராதம் செலுத்த வேண்டும். இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கான நோக்கம் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. “பணமதிப்பிழப்பு காரணமாக ஏடிஎம்களின் செயலிழப்பு பற்றி மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏடிஎம்களில் பணம் கிடைக்காத சூழல், மக்களுக்கு தவிர்க்க முடியாத சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் (WLAOs) ஏடிஎம்களில் பணம் கிடைப்பதை கண்காணிக்கவும், பணப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக சரியான நேரத்தில் பணம் நிரப்புவதை உறுதி செய்யவும் வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தவறினால் குறிப்பிட்ட வங்கி மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும்” என்று ரிசர்வ் வங்கி விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கு அல்லது வேலைநிறுத்தம் போன்ற காரணங்கள் மட்டுமே மேல்முறையீடுகளுக்கு பரிசீலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry