திமுக ஒதுங்குகிறதா? ஒதுக்கப்படுகிறதா? கூட்டணியில் புகைச்சல்! காரைக்கால் நேரு மார்க்கெட் விவகாரத்தில் வெளிப்பட்ட மோதல்!

0
48

காரைக்காலில் பத்தரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நேரு மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய கட்டுமானத்துக்கு காரணமாக இருந்த காரைக்கால் பிராந்திய திமுக அமைப்பாளர் நாஜிம் பெயரை, ஆளும் கட்சி இருட்டடிப்பு செய்வதாக திமுகவினர் குமுறுகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியை பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில், 1852-ஆம் ஆண்டு காரைக்கால் நகரின் மையப் பகுதியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது நேரு மார்க்கெட். இது சிதிலமடைந்துப்போனதால், வியாபாரிகளுக்கு வேறு இடத்தில் தற்காலிக வளாகம் ஒதுக்கப்பட்டு, பழைமையான கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடித்தது.

பின்னர் மார்க்கெட்டுக்கான புதிய கட்டிடம் கட்ட, காரைக்கால் பிராந்திய திமுக அமைப்பாளர் நாஜிம், அப்போதைய முதலமைச்சர் ரங்கசாமியிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். பழைய கட்டிடத்தில் நிலையை எடுத்துக்கூறி, புதிதாக கட்டவேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி, வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தற்காலிக வளாகத்தையும் கட்டிமுடிக்க அவர் தூண்டுகோலாக இருந்தார்

தற்போது, உலக வங்கியின், கடலோர பேரிடர் குறைப்புத் திட்டத்தின் மூலம் ரூ.10.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதுச்சேரி அரசு திட்ட அமலாக்க முகமையின் வாயிலாக கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நேரு மார்க்கெட் புதிதாக உருவாக காரணமாக இருந்த நாஜிம் பெயரை முதலமைச்சர் உள்பட அனைவரும் இருட்டடிப்பு செய்வதாக காரைக்கால் திமுகவினர் வேதனைப்படுகின்றனர்.

கூட்டணிக் கட்சித் தலைவரின் முயற்சியை பாராட்டாமல், திறப்பு விழாவுக்கு அழைக்காமல் இருப்பது நியாயமா என அவர்கள் வினவுகின்றனர். அழைத்தாலும் நாஜிம் சென்றிருப்பாரா என்பது சந்தேகமே எனக் கூறும் அவர்கள், புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை, திமுகவை கட்டம் கட்டவே நாராயணசாமியும், .வி. சுப்பிரமணியமும் முயற்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டுகின்றனர். தேர்தலில் நாஜிம் தோற்பதற்கு, .வி. சுப்பிரமணியம்தான காரணம் எனக் கூறும் அவர்கள்,  அம்மையார் கோயில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை கூட்டணிக் கட்சியான திமுகவுக்குக் கொடுக்காமல், முதலமைச்சர் நாராயணசாமி அதிமுகவுக்கு தாரைவார்த்ததாக தெரிவிக்கின்றனர்.

கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும், சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்றெல்லாம் பேசி ஸ்டாலினை, ஏமாற்றி வரும் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் திமுக மேலும் வலுப்பெற்றுவிடக்கூடாது என நினைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.  வேல்ஸ் மீடியா சார்பாக மேலும் சிலரிடம் பேசியதில், திமுகவை, காங்கிரஸ் ஒதுக்க நினைக்கிறது, ஆனால், அதுவரைக்கும் காத்திருக்காமல், திமுகவே ஒதுங்கிவிடும் என்று கூறுகின்றனர். கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்தாலும், இதுபோன்ற கருத்துகள், திமுக தொண்டர்களின் எண்ண ஓட்டத்தையே வெளிப்படுத்துகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry