ரேஷன் கடையில் அரிசி போடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! காரைக்கால் கல்வி அதிகாரியின் ‘அல்லி’ ராஜ்ஜியம்!

0
29

புதுச்சேரியில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை ரேஷன் கடையில் அரிசி போடும் பணியை செய்ய வைத்த மாநில அரசு, தற்போது, வார் ரூம் டூட்டி என்ற பெயரில், கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணியை வழங்கியுள்ளது. அப்படியென்றால் மாணவர்களின் கல்வி…?

கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 9-12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகம் கேட்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிகப்பு மற்றும் மஞ்சள் நிற உணவுப் பங்கீடு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணியை, அரசுப் பள்ளி ஆசிரியர்களை செய்ய வைத்தது புதுச்சேரி அரசு. பின்னர் அவர்களை ஆன் லைன் வகுப்பு எடுக்குமாறு அரசு அனுப்பி வைத்தது. அதன்படி அவர்கள் வகுப்புகள் எடுத்துவந்த நிலையில், கடந்த  03-09-2020 ஆம் தேதி அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது

அதில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வார் ரூம் பணியை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதாவது, தினமும் 10 முதல் 20 கொரோனா நோயாளிகளை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதுடன், அவர்கள் பற்றிய விவரங்களை படிவங்களில் பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் வார் ரூம் டியூட்டி. காலை 6 மணிக்கே இந்தப் பணியை தொடங்கிட வேண்டும். 

வார் ரூம் பணி பட்டியலில் உள்ள ஆசிரியர்கள், மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்பதுபோல, ஆன்லைன் வகுப்பை முழுமையாக எடுக்க முடியாமல், வார் ரூம் டியூட்டியை மன அழுத்தத்துடன் செய்து வருகின்றனர். இதனூடே, புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு மாற்றலாகிச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள், பேருந்துகள் இயங்காததால் புதுச்சேரியிலேயே கடந்த ஐந்து மாதங்களாக, அரிசி போடும் பணி, கொரோனா பணி, வார் ரூம் பணி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் என தொடர்ந்து இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அல்லி, அட்மிஷன் மற்றும் ஸ்காலர்ஷிப் பணிகளை கவனிப்பதற்காக, புதுச்சேரியில் இருக்கும் காரைக்கால் ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக ஊர் திரும்ப வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். வராதவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளதாகவும் தெரிகிறது.

பேருந்து வசதி இல்லாத இந்த நேரத்தில், காரைக்காலுக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி அழுத்தம் கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர். காரைக்கால் பகுதியிலேயே போதுமான ஆசிரியர்கள் பணியிலிருந்தும், புதுச்சேரி ஆசிரியர்களை  காரைக்காலுக்கு வந்தே ஆக வேண்டும் என அவர் கூறுவதன் பின்னணி என்ன என்பதும் கேள்வியாக உள்ளது.

கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குநரின் ஒப்புதலோடுதான், காரைக்கால் ஆசிரியர்கள், புதுச்சேரியில் பணி செய்து வருவதாகத் தெரிகிறது. அப்படி இருக்கையில், அமைச்சர் மற்றும் இயக்குநரின் உத்தரவை மீறி, பேருந்து வசதி இல்லாத இந்த நேரத்தில், கட்டாயம் காரைக்காலுக்கு வந்தே ஆக வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரி நிர்ப்பந்திப்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி அல்லியின், தன்னிச்சையான செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பேருந்துகள் இயக்கப்படும்வரை, காரைக்கால் ஆசிரியர்கள், புதுச்சேரியில் பணிபுரிய வேண்டும் என எழுத்துப்பூர்வ ஆணையை வெளியிட்டு, தங்களது மன அழுத்தத்தை போக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry