‘டீ கடை’யில் இன்டர்வியூ! பூத்  ஏஜென்ட் முதல் வேட்பாளர் வரை தேர்வு! திமுக-வினரின் உரிமைகளை பறிக்கிறதா I-PAC?

0
8

திமுகவுக்காக தேர்தல் வியூகம் வகுத்து வரும் ஐபேக் நிறுவனம், தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய டீ கடையில்தான் இன்டர்வியூ நடத்துகிறது. அதேபோல், திமுகவின் பூத் ஏஜென்ட் முதல் வேட்பாளர் தேர்வு வரை அனைத்தையும் செய்வது, செய்யப்போவது ஐபேக் நிறுவனம்தான்.

திமுகவிடம் ரூ.350 கோடி(உறுதிசெய்ய இயலாத தொகை) பெற்றுக்கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் வியூகம் வகுத்துக்கொடுக்கும் ஐபேக் நிறுவனத்துக்காக தற்போது தமிழ்நாட்டில் சுமார் 400 பேர் பணியாற்றுகிறார்கள். விளம்பரத்தைப் பார்த்து ஆன் லைனில் விண்ணப்பித்தால், குறுஞ்செய்தியாக அழைப்பு வரும். முதலில் தொலைபேசியில் நேர்காணல் நடக்கும். நேர்காணல் செய்யும் நபர் ஆங்கிலத்தில்தான் பேசுவார். இதில் தேறிவிட்டால், அடுத்து ஏதாவதொரு டீ கடையில் வைத்து வேறொரு நபர் உங்களை நேர்காணல் செய்வார். இருசக்கர வாகனம், லேப்டாப் இருப்பது அவசியம்.

அதுமுடிந்த பிறகு, ஹெச்.ஆர். துறையில் இருந்து அழைப்பு வரும். ரூ.6,000 பெட்ரோல் அலவன்ஸ் உள்பட, ஊதியமாக மாதம் ரூ.18,500 வழங்கப்படும். யார் ஐபேக் ஊழியர் என்பது கட்சியினருக்கே தெரியாத அளவு ரகசியம் காக்கப்படும்.

இந்த நிறுவனம் முதலில் செய்த வேலை, தொகுதி வாரியாக ஊழியர்களை நியமித்து, அரசியல் நிர்வாகிகள், தொழில் முனைவோர், பிரபலங்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோரது தொடர்பு எண்ணை சேகரித்து வைத்துள்ளது.

தற்போது, ஃபீல்டு ஒர்க் ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மேலாளர், தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், பூத் வாரியாக அனைத்து தகவல்களையும் திரட்டுகிறார்கள். அதாவது, ஒரு பூத்தில் எத்தனை வாக்குகள் உள்ளன?, ஆண், பெண், ஓட்டுகள் எவ்வளவு?, அந்த வாக்காளர்கள் எந்த சாதியை சார்ந்தவர்கள்?, ஏற்கனவே யாருக்கு வாக்களித்துள்ளார்கள்? வரும் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது? என்பது வரை சேகரிக்கும் பணி நடக்கிறது. பல இடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

இதுஒருபுறமிருக்க, பிரச்சாரத்துக்கான திட்டமிடலும் நடக்கிறது. அதாவது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு போகும்போது, இருசக்கர வாகனத்தில் திமுக கொடியுடன் இளைஞர்கள் அணிவகுப்பார்கள். அதற்கான பொறுப்பை அந்த மாவட்ட மேலாளர் எடுத்துக்கொள்வார். மாவட்ட எல்லையோடு அவர்கள் பணி முடிந்துவிடும், அடுத்த மாவட்டத்துக்குள் நுழைந்தவுடன் அந்த மாவட்ட மேலாளருக்கு பொறுப்பு சென்றுவிடும்.

அதேநேரம், பூத் ஏஜென்ட்டுகளையும் ஐபேக் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. சில மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், திமுகவைச் சாராதவர்கள்தான் பூத் ஏஜென்ட்டுகளாக நியமிக்கப்படுகிறார்கள். பேக் முன்னணி நிர்வாகிகள் கள நிலவரத்தை ஆய்வு செய்து, வெற்றி வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதும் வேட்பாளர்களையும் அடையாளம் கண்டுவிட்டனர்.

இதில், கொங்கு மாவட்டங்களும், சாதி வாக்குகளும்தான் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, இதை உடனடியாக கவனிக்குமாறு ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில்தான் வரும் 21-ந் தேதி கொங்கு மண்டல நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தை சென்னையில் நடத்துகிறார் ஸ்டாலின். அதேபோல், வடமாவட்டங்களில் வன்னியர் வாக்குகளை கவர, பாமகவை கூட்டணிக்கு கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதும் பிரசாந்த் கிஷோரின் நிர்ப்பந்தமாக உள்ளது.

பாமக வருகைக்கு சம்மதித்து, விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருக்கலாம் அல்லது வெளியேறலாம். அது திருமாவளவன் முடிவு. அதைப்பற்றி பிரசாந்த் கிஷோர் கவலைப்படவில்லை. சாதி வாக்குகளை கவரும் வலுவான கூட்டணி, 10 ஆண்டுகள் ஆட்சி மீதான சலிப்பு ஆகியவை தங்களுக்கு கைகொடுக்கும் என ஆவர் நம்புகிறார்.

பூத் ஏஜென்ட், வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் ஆகியவற்றுக்கான வியூகங்கள் ஒருபுறம் நடந்தாலும், வைட்டமின் ப விநியோகத்தில் ஐபேக் கவனமாக இருக்கிறது. அதாவது ஐபேக் மாவட்ட மேலாளர், தொகுதி பொறுப்பாளர் ஆகியோர் மூலம்தான் வைட்டமின் ப விநியோகிக்கப்படும். இதில் எந்த இடத்திலும் கட்சியினர் சேர்க்கப்படமாட்டார்கள். தேர்தல் வேலை தொடங்கி, வைட்டமின் ப விநியோமகம் வரை, மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என அனைவருமே வெறும் பார்வையாளர்கள்தான்.

1949-ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டது. மற்ற கட்சியினரோடு ஒப்பிடுகையில், தேர்தல் களத்தில் திமுகவினரை விஞ்ச ஆளில்லை என்பதை மாற்றுக் கட்சியினரே ஒப்புக்கொள்வார்கள். அண்ணாதுரை, கருணாநிதி என்ற மிகப்பெரிய ஆளுமைகளின் வழிகாட்டுதலில், தேர்தல் வேலைகள் அனைத்தும் திமுகவின் அடிமட்டத் தொண்டனுக்கும் அத்துப்படி, அது அவனுக்கு கவுரவமும்கூட. அப்படிப்பட்ட நிலையில், கட்சியை ஐபேக் என்ற நிறுவனத்திடம் அடகு வைத்துவிட்டு, தேர்தலன்று வாக்குச்சாவடி வந்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்தால் போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைக்கும் அடிமட்டத் தொண்டனின் உரிமையில் கைவைத்தால் அவர்கள் ஏற்பார்களா என ஐபேக் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ஆந்திராவில் ஜெகன்மோகனுக்காக பணிசெய்யும்போதும் இதேபோன்ற பிரச்சனை ஏற்பட்டது. கட்சியினருக்கு வேறுவழியில்லை, நாங்கள் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். இல்லையென்றால், அவர்கள் கட்டம் கட்டப்படுவார்கள் என்றார். இதுபோன்ற நடவடிக்கைகளால், திமுகவினர் கொஞ்சமாக வருத்தப்பட்டால்கூட, அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry