புதுச்சேரியில் ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லையா? தொடர்ந்து வீழ்த்தப்படும் காங்கிரஸ் கட்சியினர்!

0
7

எல்லா மாநிலங்களிலும் முன்விரோதம், அரசியல் கொலைகள் நடைபெறுவது தொடர்கதைதான். அந்த மாநிலங்களில் ஆளும் கட்யினர் பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், கொலைகள் இயல்பானதாக மாறிவரும் புதுச்சேரியில், ஆளும் கட்சியினரே கொலையாவதுதான் அதிர்ச்சியான உண்மை.

வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் சாதாரணமாக வெட்டிச்சாய்ப்பது, குரூரத்தின் வெளிப்பாடுதான். கூலிப்படையினரின் பங்குதான் இதில் மிக அதிகம். இதுபற்றி வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.

Also Readபுதுச்சேரி கொலைச்சேரி ஆனது எப்படி? காவல்துறையின் மெத்தனமா? ஆட்சியாளர்களின் அலட்சியமா? வேல்ஸ் மீடியா அலசல்!

புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், காங்கிரஸ் தலைவர்களின் தீவிர ஆதரவாளர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் என கிட்டத்தட்ட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நாராயணசாமியின் அதி தீவிர ஆதரவாளர் காலாப்பட்டு ஜோசப், சந்திரசேகர், அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் வீரப்பன், சாம்பு, அமைச்சர் நமசிவாயத்தின் ஆதரவாளர் மணிகண்டன், லட்சுமி நாராயணன் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் மாறன், லோகநாதன், பாண்டியன், கணேசன் மற்றும் ஊசுடு தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாயவன் என கொலையான காங்கிரஸார் பட்டியல் நீள்கிறது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற சம்பவங்களால், காங்கிரஸ் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, பாதுகாப்பின்மையை உணர்வதாகவே தெரிகிறது. இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். நாராயணசாமியாகட்டும், .வி. சுப்ரமணியனாகட்டும், யாருமே தொண்டர்களை காப்பாற்றும் தலைவர்கள் கிடையாது. தொண்டர்களுக்கு பிரச்சனை என்றால், ஓடிவந்து தோள் கொடுக்கும் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. இவர்கள் எப்படி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள்?

ஒரு எழுச்சி மிக்க மாநிலத் தலைமை இருந்தால், காங்கிரஸ் தொண்டர்கள் மீது கைவைக்க பயம் வரும். காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தாலும், பொது இடங்களில் எங்களைப்போன்றோர் கூனிக்குறுகி நிற்கிறோம், எங்களது சொந்தத் திறமையால் வேலைகளை முடித்துக்கொள்கிறோம். இதுவரையில் கட்சி நிர்வாகிகள் யாரும் ஆட்சியால் பலன் அடையவில்லை. இது பெருமைதானே என நினைக்கலாம், ஆனால், கட்சி பலவீனப்பட்டு வருகிறது.

ஆளுமை மிக்க தலைமை இல்லாதவரை, காங்கிரஸார் பாதிக்கப்படுவது, தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவதைத் தடுக்கவே முடியாது என்று அவர் வேதனையுடன் கூறிமுடித்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் ஜனார்தனத்திடம் பேசினோம். இதனை திட்டவட்டமாக மறுத்த அவர், எல்லா மாநிலங்களிலுமே, ஆளும் கட்சியினரின் போக்கு எப்படி இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.

காங்கிரஸைப் பொறுத்தவரை ஒருக்காலும் ரவுடிகளை ஊக்குவிக்காது. ஆட்சியில் இல்லாதபோது, கட்சியினரின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எங்கள் கட்சி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன், மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும். அதற்காக, கட்சியினரை கண்டுகொள்ள மாட்டோம் என்பது கிடையாது. சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால், ஆட்சி மீது தவறில்லை என்பது தெரியும் என விளக்கம் அளித்தார்.

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், ஒருவித பயத்துடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் எப்படி பணியாற்றுவார்கள்? ஆட்சித் தலைமையோ, மாநிலத்தில் உள்ள கட்சித் தலைமையோ இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தாவிட்டால், இதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry