தமிழகத்தில் திமுக-விடம் சரண்டரான காங்கிரஸ்! புதுச்சேரியில் நீடிக்கும் இடியாப்பச் சிக்கல்! வாக்காளர்களை சந்திக்கத் தயங்கும் திமுக!

0
25

பீகார் தேர்தல் முடிவு, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கழட்டிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொள்கிறோம் என, திமுக-விடம் காங்கிரஸ் சரண்டர் ஆகியுள்ளது. ஆனால் புதுச்சேரி நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது?

புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் – திமுக கூட்டணியில் சுமுகமான சூழல் இல்லை என்பதை இருகட்சியினருமே ஏற்கிறார்கள். ஆனால், திமுக-வை கையில் வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது முதலமைச்சர் நாராயணசாமியின் கனவு. புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி திமுக-வை அமுக்கி வைத்துள்ளதாக திமுக-வினர் வேதனை தெரிவிப்பது பற்றி வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே எழுதியிருந்தோம்.

Also Read: திமுக ஒதுங்குகிறதா? ஒதுக்கப்படுகிறதா? கூட்டணியில் புகைச்சல்!

காங்கிரஸை கழட்டிவிடும் நோக்கத்தில் இருக்கும் மாநில திமுக அமைப்பாளர்கள் மூவரும், கடந்த 6-ந் தேதி மு.க. ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, புதுச்சேரியில் திமுக தலைமையில், கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து தேர்தலை சந்திக்கலாம் என கூறியிருக்கிறார்கள். நாராயணசாமியால் கட்சி எவ்வாறு நசுக்கப்படுகிறது என்பதையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

அப்போது, கலைஞர் பெயரில் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட இருப்பதை சுட்டிக்காட்டி ஸ்டாலின் கேள்வி எழுப்ப, தேர்தல் வருவதால் கூட்டணியை தக்க வைக்க நாராயணசாமி நடத்தும் நாடகம்தான் இது என மூவரும் கூறியதாகத் தெரிகிறது. எனவேதான், கலைஞர் காலை சிற்றுண்டி திட்ட விழாவுக்கு தாம் வராமல், ஆர்.எஸ். பாரதியை ஸ்டாலின் அனுப்பியுள்ளார் என திமுக-வினர் கூறுகின்றனர்.

இந்தச் சூழலில், பீகார் தேர்தல் முடிவுகளை அடுத்து, தமிழ காங்கிரஸ் திமுக-விடம் முழுவதுமாக சரண்டராகிவிட்டது. (அதிகபட்சம் 20 இடங்கள்) எனவே, தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளதால், புதுச்சேரி நிலை என்னவாகும் என மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார், நாஜிம் ஆகியோர் மத்தியில் கவலை ஏற்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் கூட்டணி நீடித்தால், வாக்காளர்களை எப்படி சந்திக்க முடியும் என்று அவர்களுக்குள் விவாதிப்பதாக தெரிகிறது. பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகி ஒருவர் இதுபற்றி கூறியதாவது, “நாராயணசாமி அரசு மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி உள்ளது. கூட்டணி என்பதைத் தாண்டி ஆட்சியின் தவறுகளை மாநில அமைப்பாளர்கள் அவ்வப்போது பொதுவெளியிலேயே விமர்சித்தனர்.

எனவே, வரும் தேர்தல் காங்கிரசுக்கு சாதகமாக இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை. அப்படியிருக்க, காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பது தற்கொலைக்குச் சமம். தமிழக நிலை வேறு, புதுச்சேரி நிலை வேறு. தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி நீடித்தாலும், புதுச்சேரியில் மாற்று நிலைப்பாட்டை எடுத்தால்தான் தப்பிக்க முடியும்” என்று கூறினார்.

இதன்படி பார்த்தால், புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி நீடிக்கும் என மு.க. ஸ்டாலின் அறிவித்தால், தொண்டர்கள் முழுமனதுடன் தேர்தல் வேலை பார்ப்பார்களா? என்பது சந்தேகமே. எனவே புதுச்சேரி திமுக-வினரின் மனநிலைக்கு ஏற்ப தலைமை முடிவெடுக்குமா? அல்லது தமிழகம்தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry