சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் இருந்தாலும், அவர்களில் பலரை நமக்கு தெரியவே இல்லை. அவ்வாறு மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தியாகிகளை, வீரர்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை தொடங்கியிருக்கிறார் பிரபல ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ராஜா வாசுதேவன்.
பெரும் முயற்சி எடுத்து தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள் குறித்த தகவல்களை அவர் வெளிக்கொணர்ந்துள்ளார். கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி, எழுத்தாளர் ராஜா வாசுதேவன் எழுதிய புத்தகத்தை தழல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் குறித்து தமிழின் முன்னணி நூல் விமர்சகரான கோவை நாகா என்கிற நாகச்சந்திரன் மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்.
அவரது விமர்சனத்தில், “இந்த புத்தகத்தை படிக்கும்போது, ஆண்களை விட ஒருபடி மேலே தனது தேசபக்தியை காட்டியவர் அஞ்சலை அம்மாள் என்றே தோன்றுகிறது. நடந்த வரலாறு என்றாலும் சுவை மிகுந்தவாறு ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது திறன் மிகுந்த செயலாகும். இந்நூலை எழுதிய ஆசிரியர் அதில் மிகுந்த வெற்றி பெற்றிருக்கிறார்.
எத்தனை எத்தனை நிகழ்வுகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன. தேசபக்தியுடன் அஞ்சலை அம்மாள் செய்த காரியங்கள், சந்திப்புகள், போராட்டங்கள் இவையனைத்தையும் குறிப்பிட அவா எழுந்தாலும் இடம், நேரம் கருதி 2 நிகழ்வுகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
ஜார்ஜ் ஸ்மித் நீல் என்ற பிரிட்டிஷ்காரரின் சிலை, பழைய மதராஸ் நகரில் நிறுவப்பட்டிருந்தது. நீல் கொடுங்கோலன் என்பதை அறிந்து, அவனுடைய சிலையை நீக்கும் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் இருந்தும், வேறு பல ஊர்களிலிருந்தும் பெண்களை மட்டுமே திரட்டி அஞ்சலை அம்மாள் தலைமையேற்று நடத்திய போராட்டம் அது.
அதில் ஒரு சிறப்பு என்னவெனில் தனது 11 வயது மகள் “அம்மாபொண்ணு” வை உடன் அழைத்துச் சென்றதுதான். தன் தோளின் மீது மகளை நிற்க வைத்து, கையில் சுத்தியை கொடுத்து, சிலையின் விரல்களை உடைத்த நிகழ்வை வாசிக்கும்போது பரவசப்படுத்துகிறது.பிரிட்டிஷ் போலீசாரின் அடக்குமுறையில் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் தாய்க்கும், மகளுக்கும் மட்டுமே சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வைப் படிக்கும் போது சிறப்பாக உள்ளது. மகள் அம்மா பொண்ணுவை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பும் போதும் கலங்காத நெஞ்சம் உள்ளவராக இருந்திருக்கிறார் அஞ்சலை அம்மாள்!
பிற்காலத்தில் இவர் சென்னை மாகாணத்தில் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் ஆகியிருக்கிறார். ஒருமுறை ஒரு ஊரில் ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்க வேறு சாதி மக்களை வேறு ஒரு பிரிவினர் அனுமதிக்காத செய்தியை அறிந்து, நேராக அங்கு சென்று மக்களிடையே பேசி, தானே அவர்களுக்காக முன் நின்று தண்ணீர் எடுத்துக் கொடுத்திருக்கிறார். இது போன்ற பல நிகழ்வுகளை இந்நூல் திறம்பட நம்முன்னே கொண்டு வருகிறது.
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து மயக்கமுற்ற அஞ்சலை அம்மாள், பிறகு கண்விழித்த போது தன் கணவரிடம், ஏங்க, இனி நான் அரசியலில் தொடரமாட்டேன். காந்தி சொன்னபடி கிராமங்களுக்கு போலாமுங்க என்று கூறி, கடலூரிலிருந்து 30 மைல் தொலைவிலுள்ள சி.முட்லூர் கிராமத்திலுள்ள தனது இன்னொரு மகன் காந்தியின் (ஆம். மகனின் பெயர் காந்தி!)வீட்டுக்குச் சென்று அங்கிருந்து சேவையை தொடர்ந்திருக்கிறார்.
ஆங்கிலத்தில் புலமை மிக்க அஞ்சலை அம்மாள், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். தனது 71வது வயதில் 1961 ம் ஆண்டு மறைந்தார். இந்நூலை முழுவதும் படித்து உணர்வதே நாம் இவருக்கு, இந்த தியாகிக்கு செய்யும் மரியாதை! அஞ்சலைக்கு ஓர் அஞ்சலி என்றுணர்வோம். விதைத்த விதை விருட்சமாக வளர வேண்டும். பெண்கள் சுதந்திரமாக பொதுவெளியில் சமுதாயப் பணியில் ஈடுபட வேண்டும்.
பெண்களின் ஆதர்ச உருவமாக, தைரியப் பெண்மணியாக, நாட்டின் மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்த, உண்மையான தேசபக்தராக இருந்தவரைப்பற்றிய உண்மை வரலாற்றைப் படிக்கும்போது, அஞ்சலை அம்மாளை நம் மனதில் நீங்கா இடம் பிடிக்க வைக்கிறார் எழுத்தாளர்” என்று நாகா குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்டங்களில் நமது மூதாதையர்கள் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டார்கள். அதற்கு மிகச்சரியான சான்றாக அஞ்சலை அம்மா அவர்களின் குடும்பத்தை நம்முன்னே நிறுத்தியிருக்கிறார் ராஜா வாசுதேவன். அஞ்சலை அம்மாளைப்போல, இந்த சமூகம் மறந்துவிட்ட பல போராட்ட நாயகர்களின் உண்மைக் கதை இருக்கவே செய்கிறது. ராஜா வாசுதேவன் போன்ற எழுத்தாளர்கள் புறப்பட்டு அதனை மக்களுக்கு அளித்திட வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry