புதுச்சேரி பாஜக தலைவராகிறாரா நமச்சிவாயம்? சாமிநாதனுக்கு தேசிய அளவில் பதவியா?

0
135

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை மாநிலத் தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தற்போதைய மாநிலத் தலைவர் சாமிநாதனுக்கு, தேசிய அளவிலான ஏதாவதொரு பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தென் மாநிலங்களில், குறிப்பாக, கேரளா, தமிழகம், புதுச்சேரியில் கால்பதிக்க பாஜக மேலிடம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சரியான தலைமை இல்லாமல் தடுமாறி வந்த புதுச்சேரி பாஜகவில், பல்வேறு பிரபலங்களையும், மாற்று கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களையும் இழுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பிரதேச காங்கிரஸை அசைத்துப் பார்க்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாஜக இழுத்துவிட்டது. அதாவது, நமச்சிவாயத்துக்கு காங்கிரஸ் கட்சி மீதிருந்த அதிருப்தியை பாஜக பயன்படுத்திக்கொண்டது. புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், அங்கு அரசியல் சூழல் முற்றிலுமாக மாறிவிட்டது.

கடந்த திங்கள் கிழமை, அமைச்சர் மற்றும் எம்.எல்.. பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லி சென்று கடந்த வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளமான புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவில் தாம் இணைந்துள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில், வரும் 31ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதுச்சேரி வர இருக்கிறார். அப்போது பல்வேறு மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபற்றி பாஜக நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், புதுச்சேரியில் பாஜக வளர்ச்சி பெறவில்லை. அதற்கு வலுவான மாநிலத் தலைமை இல்லாததே காரணம். இதை கட்சியின் தேசியத் தலைமையும் உணர்ந்திருந்தது.

Samynathan

தற்போது, நமச்சிவாயம் இணைந்திருப்பதன் மூலம் கட்சிக்கு யானை பலம் கிடைத்திருக்கிறது. நீண்ட அரசியல் அனுபவமும், ஆட்சி அதிகாரத்திலும் இருந்துள்ள நமச்சிவாயம் கட்சிக்கு வந்தபிறகு, அவருக்குத்தான் மாநிலத் தலைவர் பதவி கொடுக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். அதைத்தான் தேசியத் தலைமையும் முடிவு செய்திருக்கிறது. அவரை மாநிலத் தலைவராக நியமிப்பதன் மூலம், புதுச்சேரியில் பாஜக அசுர வளர்ச்சி பெறும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாதுஎன்று கூறினார்

2016-ம் ஆண்டு முதலமைச்சர் பதவியை தட்டிப்பறித்த நாராயணசாமி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் நமச்சிவாயத்தை நீக்கினார். இதற்கு பதிலடி தரும் விதமாக, புதுச்சேரி மாநில பாஜக தலைவராக நமச்சிவாயம் அமர்ந்தவுடன், புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பது திண்ணம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry