காவிரி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகா முறையாக செயல்பட்டுள்ளது! உச்ச நீதிமன்றத்தில் மேலாண்மை ஆணையம் அறிக்கை!

0
31
KRS DAM | FILE IMAGE

காவிரி நதி நீர்ப் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என  திட்டவட்டமாகக் கூறியது.

அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு விளக்கம் அளித்தது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீதம் அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், விநாடிக்கு 3000 கன அடிக்கு மேல் நீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அரசு தெரிவித்தது.

Also Read : தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது! காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை நிராகரிக்கும் கர்நாடகா முதலமைச்சர்!

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான எஞ்சியுள்ள நாட்களுக்குத் தேவையான 24,000 கனஅடி நீரை நாள்தோறும் உடனடியாக திறந்துவிட வேண்டும் என்றும், செப்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு கடந்த 26ம் தேதி விசாரித்தது.

காவிரியில் இருந்து உரிய நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்தியிருப்பது குறித்த அறிக்கையை, செப்டம்பர் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் 21 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

Also Read : லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போன்று நிறம் மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் ஐகோர்ட் கடும் கண்டனம்!

அதில், “30 ஆண்டு சராசரி நீர் இருப்புடன் ஒப்பிட்டு பற்றாக்குறை காலப் பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு 1,49,898 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு நாள்தோறும் 5000 கன அடி நீரை திறந்து விடுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

கர்நாடக மாநிலத்தில் காவிரிப் படுகையில் உள்ள நீர்த்தேக்கங்கள் தென்மேற்குப் பருவமழையை நம்பியே உள்ளன. தமிழ்நாட்டின் நீர்த்தேக்கங்களும் வடகிழக்கு பருவமழை மூலம் நன்மை பெறுகிறது. ஆனால் கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவில் மழை இல்லாததால், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. அதேவேளையில், கர்நாடகாவின் மழை அளவை கருத்தில் கொண்டு தான், தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது எனவும் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளது.

Also Read : காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்! தமிழகத்திற்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தது கர்நாடகா!

இதனிடையே, கர்நாடகாவில் விவசாயிகளின் நலன்களையும், மக்களின் குடிநீர் தேவையையும் காக்க சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “காவிரி விவகாரத்தில் ஆரம்பம் முதலே அரசு தடுமாறி வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அரசாங்கம் தினமும் 5,000 கன அடி தண்ணீர் திறக்கத் தொடங்கியுள்ள நிலையில், நீர்வளத் துறையை வைத்திருக்கும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இப்போது சட்ட வல்லுநர்களுடன் விவாதிப்பதன் பயன் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. அதில் நீர் பற்றாக்குறை இருப்பது அறிந்தும் உரிய உத்தரவை கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

8.9 டிஎம்சி அளவிற்கு நீர் திறக்க உத்தரவிட்டிருக்க வேண்டிய நிலையில் அதை செய்ய காவிரி ஆணையம் தவறிவிட்டது. ஆக.29 முதல் செப்.12 வரை 7,200 கன அடி நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், 5,000 கனஅடி நீரை திறக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கையை காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry