புதுச்சேரியில் முழு லாக்டவுண் கோரி அரசிடம் மனு! நீதிமன்றத்தை நாடவும் கலாம் சேவை மையம் முடிவு!

0
26

புதுச்சேரியில் முழு லாக் டவுணை அமல்படுத்த வேண்டும் என கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத் அரசிடம் மனு கொடுத்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 2 வாரங்களுக்கு முழு லாக் டவுண் அமலபடுத்தக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சம்பத் மனு அளித்தார். அதில், ஐ.சி.எம்.ஆர். ஆய்வின்படி, நாட்டிலேயே, வேகமாக கொரோனா தொற்று பரவுவதில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

லாக் டவுண் தளர்த்தப்படும் வரை பரவல் விகிதம் மிகக் குறைவாக இருந்ததையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழே இருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லாக் டவுண் தளர்த்தப்பட்ட பிறகு, பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்திருப்பதன்மூலம், கொரோனா பரவல் மிகவும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வேல்ஸ் மீடியாவிடம் பேசிய சம்பத், கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருக்கிறது, மருத்துவமனைகள் நிரம்பி வழகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இன்று மட்டும் 345 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 10,859 ஆக உயர்ந்துவிட்டது. புதுச்சேரியில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

பரவலை கட்டுப்படுத்த முழு லாக் டவுனை அமல்படுத்துமாறு கடந்த 12 மற்றும் 20-ந் தேதிகளில் கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. மக்கள் நலனில் அரசு இவ்வாறு அசட்டையாக இருப்பதை ஏற்க முடியாது. உடனடியாக முழு லாக் டவுண் அறிவித்து, வழிகாட்டு நெறிமுறைகளைகளுடன், இ-பாஸ் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு உடனடியாக இதை செய்யத் தவறினால், உயர் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.