காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் ராஜேஷ் தாஸ்! பாலியல் புகார் குறித்து விசாரிக்க 6 பேர் குழு!

0
22

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு டிஜிபி பதவியும் பழையபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 21-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். முதலமைச்சரின் பாதுகாப்புக்காக தமிழக காவல் துறையின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் சென்றிருந்தார். முதலமைச்சருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜேஷ்தாஸ் செய்தார்.

இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அதிகாரி, சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

இந்தச் சம்பவம் தமிழக காவல் துறையினரிடம் பெரும் அதிர்ச்சியையயும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதேவேளையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பாலியல் புகாரில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. இதற்கிடையே, பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகார் அடிப்படையில் விசாரணைக் குழு அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் புதன்கிழமை உத்தரவிட்டார்

இந்தக் குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக காவல் துறையின் தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு ஐஜி ஏ. அருண், காஞ்சிபுரம் டிஐஜி பி. சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வி.கே. ரமேஷ்பாபு, சர்வதேச நீதி அமைப்பின் நிர்வாகி லோரெட்டா ஜோனா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புகார் குறித்து இவர்கள் ஓரிரு நாளில் விசாரணையை தொடங்குவார்கள் எனக் கூறப்படுகிறதுகாவல் துறையில் பாலியல் தொடர்பான புகார்களை விசாகா கமிட்டி விசாரணை செய்யும். ஆனால், இப்போது டிஜிபி அளவிலான அதிகாரி, பாலியல் புகாரில் சிக்கியிருப்பதால் கூடுதல் தலைமைச் செயலர் அளவிலான அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜேஷ் தாஸ் மீதான புகார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவர் மீது துறை ரீதியாகவும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்துவந்த சிறப்பு டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பதவியும் நீக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்தபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை செயலாளரான பீலா ராஜேஷின் கணவர்தான் ராஜேஷ்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry