மாப்பிள்ளை அரவணைப்பில் தனி டிராக்கில் பயணிக்கும் பிடிஆர்! கொந்தளிப்பில் சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகள்!

0
16

நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பழனிவேல் தியாகராஜன் சர்ச்சை வளையத்திற்கு உள்ளேயே சுற்றி வருகிறார். இவரது தனி ஆவர்த்தனம் கட்சிக்கு நல்லதல்ல என சீனியர்கள் வேதனைப்படுகின்றனர்.

தனது குடும்பப் பெருமையை சொல்லாமல், பழனிவேல் தியாகராஜன் பேசுவதோ, சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடுவதோ இல்லை என்பதால், அவரைப் பற்றிய அறிமுகம் இங்கு தேவைப்படவில்லை. சிலர் அறிந்த, பலரும் அறியாத ஒரு தகவல் உண்டென்றால், அது, முதலமைச்சரின் மருமகன் சபரீசனின் நெருங்கிய உறவினர்தான் பழனிவேல் தியாகராஜன்.

பி.டி.ஆர். பழனிவேல் ராஜனோடு முடிந்திருக்க வேண்டிய அந்தக் குடும்பத்தின் அரசியல் பயணத்தை, சபரீசன்தான் மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார். வெளிநாட்டில் பணியிலிருந்த பழனிவேல் தியாகராஜனை வரவழைத்து கடந்த தேர்தலின்போதே சபரீசன்தான் எம்.எல்.. சீட் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் கட்சியின் ஐ.டி. விங் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார். இதன் பின்னணியில் சபரீசன் பல கணக்குகளை போட்டுவைத்திருப்பதாகத் தெரிகிறது.

திமுக ஐ.டி. விங் பொறுப்பாளர் என்ற முறையில் கூட யாரும் எளிதில் அணுக முடியாதபடியே பழனிவேல் தியாகராஜன் இருந்ததாக கட்சியினரே கூறுகின்றனர். அதேபோல், நிர்வாகிகளின் கருத்தை அல்லது கோரிக்கைகளை ஏற்பதோ அல்லது அவர்களை மதிப்பதோ கிடையாது என்ற புகாரும் உண்டு. இதுபற்றி ஐ.டி. விங் நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, வேலை வாங்கியே பழக்கப்பட்ட குடும்பம் அவருடையது. ஒரு கம்பெனியை நிர்வகிப்பது என்பது வேறு, அரசியல் நெளிவு சுளிவு அறிந்து, தொண்டர்கள், நிர்வாகிகள் மனநிலை அறிந்து நடந்துகொள்வது வேறு.

இவரது தந்தை பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், பண்பாணவர் என மாற்று கட்சியினரால் கூட மதிக்கப்பட்டவர். ஆனால், அமைச்சரான பிறகு தியாகராஜன் நடவடிக்கைகள் மேலும் மாறிவிட்டதுஎன்றார்.     

கட்சியின் ஐ.டி. விங் பொறுப்பாளரான இவர், தனக்கென பிரத்யேகமானதொரு ஐ.டி. டீமை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரை மு.. ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு மட்டும்தான் சமூக ஊடகங்களில் நேரலை செய்யப்படும். ஆனால், தியாகராஜன் தனது செய்தியாளர் சந்திப்புகளை, தனது ஐ.டி. டீம் மூலம் நேரலை செய்வதாகத் தெரிகிறது. கட்சித் தலைவரையும் தாண்டி, தம்மை பிரமோஷன் செய்துகொள்ள வேண்டும் என அவர் நினைக்கிறார், இதன் பின்னணி என்ன என்பது புரியவில்லை என கட்சியினர் சொல்கின்றனர்

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக பிரஸ் மீட்டிற்கு அழைத்துவிட்டு, கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம், அறிவு இருக்கா, ஸ்கூலுக்கு போனதில்லையா என பழனிவேல் தியாகராஜன் கேட்டது சர்ச்சையானது. இதுபற்றி கருத்து தெரிவித்த நடுநிலை பத்திரிகையாளர் ஒருவர், “பெரும்பாலான பெரிய ஊடகங்கள் திமுக சார்பு நிலையில் இருப்பதால் இந்த விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது. வேறு கட்சியினர் யாராவது இதுபோன்று பேசியிருந்தால், பத்திரிகையாளர் சங்கங்கள் போராட வந்திருப்பதார்கள், சம்பந்தப்பட்ட நிர்வாகி வீட்டின் மீது கல்லெறிந்திருப்பார்கள்எனக் கூறினார்.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்போம் என தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என நிதியமைச்சர் கூறிவிட்டார். தமிழ்நாட்டின் கடன் சுமையை அறிந்து இதுபோன்ற வாக்குறுதிகளை கொடுத்திருக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் கேட்டால், நாங்கள் தேதி சொன்னோமா என கோவமாக பதில் கேள்வி கேட்கிறார். இது திமுகவின் இமேஜை டோட்டலாக டேமேஜ் ஆக்கியுள்ளது.

தமிழகத்தில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்வதாக தியாகராஜன் கூறியிருந்தார். ஆனால் 1955-ல் இருந்தே வெளிமாநிலத்தவர் தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருக்கும்போது, அது தெரியாமல் அமைச்சராக இருககும் தியாகரஜன் பேசியது திமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தமிழகத்தின் கடன்சுமை 9 லட்சம் கோடி என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 5 லட்சம் கோடி கடன் இருப்பதாக பழனிவேல் தியாகரஜன் கூறுகிறார். இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.

ஜக்கி வாசுதேவ் பற்றி ஒருமையில் பேசியது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சம்பந்தமில்லாமல் பேசிவிட்டு வந்தது என கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையிலேயே அவரது நடவடிக்கைகள் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான், பிரதமரை சந்திக்கச் செல்லும்போது, முதலமைச்சர் ஸ்டாலின் தியாகராஜனை உடன் அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மு..ஸ்டாலினின் வாரிசும், அடுத்த திமுக தலைவர் என்று கூறப்படுபவருமான உதயநிதியின் செயல்பாடுகள் கூட பேஸ்புக்கில் நேரலை செய்யப்படுவதில்லை. பழனிவேல் தியாகராஜன் இவர்களைத் தாண்டி தம்மை பிரமோட் செய்து கொள்ளும் விதம் சீனியர் அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும் கொதிப்படைய வைத்துள்ளது. தியாகராஜனை இப்படியே விட்டால் கட்சி மற்றும் ஆட்சியின் பெயர் கெட்டுவிடும் என்று சீனியர்கள் மு.. ஸ்டாலினிடம் விவரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், அமைச்சரான பிறகும் கூட அவர் தன்னை புரமோட் செய்து கொள்கிறார் என்றால் கவனம் தேவை என்று உதயநிதியிடும் சிலர் கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, தியாகராஜனின் எகத்தாளமான பேட்டியை சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பினார். ஆனாலும், அவர் சபரீசனின் முழு அரவணைப்பில் இருப்பதால், அவரை நெருங்கவே கட்சி நிர்வாகிகள் யோசிக்கும் நிலைதான் உள்ளது என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. சபரீசனைத் தாண்டி பழனிவேல் தியாகராஜன் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காது, சில மாதங்கள் சைலன்ட் மோடில் இருக்குமாறு கட்சித் தலைமை அவரை கேட்டுக்கொள்ள மட்டுமே வாய்ப்புள்ளது என திமுகவினர் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry