புதுச்சேரியில் 30 தொகுதியிலும் வெற்றி! இல்லையேல் மேடையிலேயே தற்கொலை என ஜெகத்ரட்சகன் ஆவேசம்!

0
22

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டி விட திமுக முடிவு செய்திருப்பது தெளிவாகியிருக்கிறது.

புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று  நடைபெற்றது. மாநில அமைப்பாளர்(தெற்கு) சிவா எம்.எல்.ஏ வரவேற்றார். வடக்கு மற்றும் காரைக்கால் மாநில அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், நாஜிம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், ‘‘23 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைமையில் ஆட்சி அமைத்து, கறுப்பு, சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி. இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் ஸ்டாலினிடம் சொல்ல இருக்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் என்ன செய்ய முடியாது? ஏன் செய்ய முடியாது? தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. பல குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன. என்ன வருவாய் வருகிறது. வருவாய்க்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள். வேலை வாய்ப்பு இல்லை. விவசாயம் பொய்த்துவிட்டது. புதுச்சேரி சொர்க்கப்பூமியாக இருந்தது ஆனால் தற்போது நரகமாக மாறிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளனநான் இந்த மண்ணைச் சேர்ந்தவன். இந்த மாநிலத்தைச் சொர்க்கமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை.

Also Read : கிங் மேக்கராகிறார் ஜெகத்ரட்சகன்! புதுச்சேரியில் தனித்துக் களமிறங்கும் திமுக! காங்.கை கழட்டி விடுவதால் மாநில அமைப்பாளர்கள் மகிழ்ச்சி!

புதுச்சேரியை ஒரு புதுமையான, வளமான, உலகத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்க்கும் மாநிலமாக இருக்க ஸ்டாலின் தலைமையில், அவருடைய ஆணையோடு திமுக தலைமையில் கூட்டணி அமையும். எந்த இயக்கங்களுடன் கூட்டணி, யாருடன் தேர்தலைச் சந்திப்பது என்பது குறித்து ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார்.

புதுச்சேரி திமுகவினர் எனக்கு ஒரு உறுதியைத் தர வேண்டும். ஸ்டாலின் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுத் தந்தால்தான் நான் இங்கே வருவேன். இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன்’’. இவ்வாறு ஜெகத்ரட்சகன் பேசினார். இதன் மூலம் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், தான் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்பதை அவர் சூசகமாக உணர்த்தியிருக்கிறார். எனவே வரும் தேர்தலில் காங்கிரஸை கழட்டிவிட திமுக முடிவுசெய்திருப்பது உறுதியாகிவிட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry