எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ளுங்கள்! ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

0
3

திமுகவுக்கு இது இறுதித் தேர்தலாக அமைய வேண்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஆதரவாக இன்று பாலக்கோட்டில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ’’தமிழகத்தில் பல ஆண்டு காலம் திமுக ஆட்சியில் இருந்தது. அதேபோல, மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சியினருடனும் திமுக கூட்டணியில் இருந்தது. ஆனாலும், தமிழக மக்களுக்கு இதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது என்பது போல திமுக சார்பில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதிமுக எப்போதும்  அதிமுக என்றைக்கும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாகவும், அரணாகவும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க் கட்சியினரைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிட்டு மாற்றுக் கட்சியினருக்கு அவர் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மீண்டும் திமுக எதிர்க்கட்சியாக வர ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும். மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் மூடு விழா எடுக்க வேண்டும். இந்தத் தேர்தல் திமுகவிற்கு இறுதித் தேர்தலாக அமைய வேண்டும். 10 ஆண்டுகளாகப் பதவியில் இல்லாததால் ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். ஸ்டாலினுடைய முதலமைச்சர் கனவு, கானல் நீராகும். அதிமுக ஒரு ஜனநாயகக் கட்சி. இங்கு சாதாரணத் தொண்டனும் முதலமைச்சர் பதவியை வகிக்க முடியும். இந்தத் தேர்தலில் மக்கள் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து மீண்டும் அதிமுக அரசு அமைய பேராதரவு வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன், என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry