கொரோனாவுக்காக தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

0
36

கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது  தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாக சென்று பிரச்சாரம் செய்வதால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா பரவலை தடுக்க முடியவில்லை. எனவே, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டும் பிரச்சாரம் செய்யுமாறு உத்தரவிடவும் மனுவில் அவர் கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக கடந்த 2ம் தேதி, தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவது, இராண்டாவது அலையாக இருக்கலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் தலையிட முடியாது, பிரச்சாரங்களுக்கும் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம், பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிவதையும், தனி மனித விலகலை பின்பற்றுவதையும், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry