பாமக-வில் டாக்டர் முத்துக்குமரன்? புதுச்சேரி மாநில அமைப்பாளர் பதவி கிடைக்க வாய்ப்பு!

0
30

வன்னியர்கள் ஆதிக்கம் மிகுந்த புதுச்சேரியில் பாமக இதுவரை வலுவாக கால்பதிக்க இயலாததற்கு மாநிலத் தலைமையே காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த முறை புதுச்சேரியில், இளைஞரிடம் கட்சியை ஒப்படைத்து குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்ய மருத்துவர் ராமதாஸும், மருத்துவர் அன்புமணி ராமதாஸும் திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 60 சதவிகிதம் அளவுக்கு வன்னியர்கள் அடர்த்தியாக இருந்தாலும், அவர்கள் கட்சி ரீதியாக பிளவுபட்டுக் கிடப்பதால், பாமக-வால் சாதிக்கமுடியவில்லை. வன்னியர்களை ஒருங்கிணைக்கும் தலைமை இல்லாததை இது வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

கவர்ச்சி, செல்வாக்கு, ஆளுமைத் திறன் கொண்ட ஒருவரை புதுச்சேரி தலைமைக்கு அடையாளம் காண முடியாததும் பாமக-வின் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளராக டாக்டர் முத்துக்குமரன் நியமிக்கப்படலாம் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி வேல்ஸ் மீடியா சார்பில் விசாரித்தோம்.

42 வயதான டாக்டர் முத்துக்குமரன், தற்போது திமுக-வில் புதுச்சேரி தெற்கு மாநில மருத்துவர் அணி அமைப்பாளராக இருக்கிறார். எம்.பி.சி. இடஒதுக்கீட்டின் கீழ்தான் சென்னையில் அவர் மருத்துவம் படித்துள்ளார். 1996 முதலே மருத்துவர் ராமதாஸ் மீதும், சமூக நீதி கோட்பாடுகளின் மீதும் ஈர்ப்பு கொண்டவராக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி நாம் விசாரித்த வகையில், மருத்துவர் ராமதாஸ் குடும்பத்துக்கு நெருக்கமானவராகவே அவர் அறியப்படுகிறார்.

அதேபோல், மாணவப் பருவத்திலேயே வன்னியர்களை மையமாகக் கொண்டு டாக்டர் ராமதாஸால் துவங்கப்பட்ட சமூக முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பில் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அதேபோல், 2016-ல் மருத்துவர் அன்புமணியை வைத்து, Dr.’s for Change என்ற மாநில அளவிலான இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார். மாணவப் பருவம் முதல் இதுவரையிலுமே பாமக-வின் சமூக நீதி கோட்பாடுகள், மருத்துவர் ராமதாஸை ஒட்டியே அவர் அரசியல் பயணம் இருந்து வருகிறது.

டாக்டர் முத்துக்குமரனின் ஆதரவாளர்களிடம் இதுபற்றி பேசியபோது, புதுச்சேரியில், திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. மருத்துவர் ராமதாஸின் பற்றாளரான இவருக்கு மாநில அமைப்பாளர் பொறுப்பு கொடுத்தால், சிறப்பாக செயல்படுவார். மாநிலத்தில் கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சுவார்.

மருத்துவர் ராமதாஸின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால், அவர்களது எதிர்பார்ப்புகளை நன்கு அறிந்தவர். பதவியை, பொறுப்பாக நினைக்கும் அவர், புதுச்சேரியில் வன்னியர்களை அரவணைத்து கட்சியை வலுப்படுத்துவார். வரும் தேர்தலில் இல்லாவிட்டாலும், அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து, பாமக-வை, ஆட்சி அதிகாரத்தின் முக்கிய இடத்தில் டாக்டர் முத்துக்குமரன் அமர வைப்பார் என்றும் தெரிவித்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry