முதல்வர் வேட்பாளராகும் எடப்பாடி! பொங்கித் தீர்த்த ஓபிஎஸ்! அதிமுக செயற்குழு எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

0
18

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது. தம்மை தனிமைப்படுத்தவே செயற்குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக ஓபிஎஸ் குமுற, உங்களை முன்நிறுத்தினால் தோல்விதான் என்பன போன்ற கடுமையான வாக்குவாதங்களுடன் நடந்து முடிந்துள்ளது அதிமுக செயற்குழு.

அதிமுக செயற்குழு குறித்து, அதில் கலந்துகொண்ட நிர்வாகி ஒருவரிடம் வேல்ஸ் மீடியாக சார்பாக பேசினோம். அவர் சொன்ன எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்தான் இவை. செயற்குழுவில் வழக்கம்போல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதம் எழுந்துள்ளது.

எடப்பாடி பழினிசாமிக்கு ஆதரவாக சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, செம்மலை, திண்டுக்கல் சீனுவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பேசியுள்ளனர். ஓபிஎஸ்-க்கு, கேபி முனுசாமி, ஜேசிடி பிரபாகரன், அன்வர் ராஜா போன்ற வெகுசிலரே ஆதரவாக பேசியுள்ளனர்.

அமைச்சர் சிவி சண்முகம்

முதலமைச்சர் வேட்பாளரை இப்போதே அறிவுயுங்கள். தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உங்களது சண்டைக்காக கட்சியை இழக்க முடியாது. யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல, ஆட்சிதான் முக்கியம். முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்துவிட்டுத்தான் தேர்தலை சந்திக்க வேண்டும். இருவரும் பேசி முடிவெடுத்து உடனடியாக ஒரு முடிவுக்கு வர வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சரின் திட்டங்களே காரணம்.

செம்மலை

எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தால், எளிதாக வாக்குகளை பெற முடியும். எடப்பாடியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறினால், மக்கள் மனதில் பதியும், அது வாக்குகளாக மாறும்.

எஸ்பி வேலுமணி

யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 10 நாட்களாக இந்த விவகாரம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நத்தம் விஸ்வநாதன்

முதலமைச்சர் வேட்பாளரை அறிந்து கொள்ள அனைவருக்குமே ஆவலாகத்தான் உள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலும், முதலமைச்சர் வேட்பாளரை மாற்றிவிட்டு தேர்தலை சந்திப்பது தற்கொலைக்கு சமம். ஆட்சி எடப்பாடி வசமும், கட்சி ஓபிஎஸ் வசமும் இருக்க வேண்டும். 11 பேர் குழுவை அமைத்து முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதுதான் சிறந்தது என பண்ருட்டி ராமச்சந்திரனும், அன்வர் ராஜாவும் தெரிவித்தனர். பின்னர்தான் ஆரம்பமானது கிளைமேக்ஸ். வைத்திலிங்கம் யாரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

செயற்குழு முடிவுக்குக் கட்டுப்படுகிறேன். என்ன பணி கொடுத்தாலும் கட்சிக்காக சிறப்பாக செயல்படுவேன். முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சனை எழுந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஆகஸ்ட் 15-ல் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை ஏற்பட்டது. 30 நாளில் சரியாகும் என்றார்கள். ஆனால் 45 நாட்களாகிவிட்டது. முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சையால் 4 சதவிகித வாக்குள் குறைந்துள்ளது.

ஓ. பன்னீர்செல்வம்

11 பேர் குழு அமைத்துதான் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அதுதான் கட்சிக்கு நல்லது. என்னை தனிமைப்படுத்துவதற்காகவே இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளீர்கள். இணைப்பின்போது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சிப்பொறுப்பை தருவதாகக் கூறினீர்கள். ஆனால் தற்போது உங்களையே முன்னிறுத்துகிறீர்கள். முதலமைச்சர் சர்ச்சையை கிளப்பியது நீங்கள்தான். கே.டி. ராஜேந்திர பாலாஜி மூலம் சர்ச்சையை எழுப்பிவிட்டு, அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கச் சொன்னீர்கள். மீண்டும் அவருக்கு பொறுப்பு கொடுக்குமாறு கூறினீர்கள். இதிலிருந்தே தெரியலவில்லையா, யார் இந்த விவகாரத்தை கிளப்பியது என்று? தங்கமணி என்னை அவமானப்படுத்தினார்.

7-ந் தேதி சி.எம். வேட்பாளர் அறிவிப்பு

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, அவர் எந்த தவறும் செய்யவில்லை. தங்களையும், என்னையும் முதலமைச்சர் ஆக்கியது சசிகலாதான். ஜெயலலிதா மறைவின்போது, நாம் இருவர் மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகியோரை அழைத்து சசிகலா பேசியபோது, நாங்கள்தான் உங்களை முதலமைச்சராக்க பரிந்துரைத்தோம் என்றார். இவ்வாறு காரசார விவதாங்களுடன் 5 மணி நேரம் நடைபெற்று முடிந்தது அதிமுக செயற்குழு. இறுதியில் வரும் 7-ந் தேதி முதலமைச்சர் வேட்பாளரை, எடப்பாடியும், ஓபிஎஸ்-சும் அறிவிப்பார்கள் என்று கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

இனி என்ன நடக்கும்?

செயற்குழுவில் நடந்தவற்றை பார்க்கும்போது, ஓபிஎஸ்-ஐ முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், தேர்தலில் தோல்வி என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது. எனவே, எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது. கட்சி ஓபிஎஸ் வசம், ஆட்சி எடப்பாடி வசம் என டீல் பேசி ஓபிஎஸ்-ஐ சம்மதிக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. இதற்கு சம்மதித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். இல்லையென்றால், அவர் சொன்னதுபோல, தனிமைப்படுத்தப்படுவது நிச்சயமாகியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry