சசிகலா தேவையில்லாத ஆணி! ஆட்சியே அவர்களுக்கு எதிரானதுதான்!கொந்தளிக்கும் எடப்பாடி தரப்பு!

0
41

சசிகலாவை எதிர்த்துதான் கட்சியும், ஆட்சியும் நடைபெறுகிறது. அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. பத்து ஆண்டு வனவாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரசாந்த் கிஷோரை திமுக நம்பியிருக்க, மக்கள் நலத்திட்டங்களை காட்டி ஹாட்ரிக் அடிக்க அதிமுக முயற்சிக்கிறது.

அதிமுக-வில் எடப்பாடி பழனிச்சாமி, . பன்னீர் செல்வம் என்ற இரட்டை தலைமை உள்ள நிலையில், ஒற்றை தலைமையைத்தான் கட்சியினர் விரும்புவதாகக் கூறும் சிலர், சசிகலா ரிலீஸாகி வந்த பின்னர் அதிமுகவில் நிறைய மாற்றங்கள் நடைபெறும் என ஆருடம் கூறுகின்றனர். அதற்கேற்றார்போல, டெல்லியின் பரிபூரரண ஆதரவுடன், அதிமுகவில் ஓபிஎஸ் கையே ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆட்சி நிர்வாகத்தில் கொங்கு ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள், நிர்வாகிகள், ஓபிஎஸ் உடன் கைகோர்த்துள்ளனர். எனவே, அவரை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது.

சசிகலா வெளியே வந்தவுடன், கட்சி நிர்வாகம் அவரிடம் செல்லும் என்றும், அதுதொடர்பாகவே, டிடிவி தினகரன் டெல்லி சென்று பாஜக தரப்பில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், சசிகலா வரவை ஏற்குமாறு பாஜக கூறியதை அடுத்தே, ஓபிஎஸ் தரப்பு எடப்பாடிக்கு எதிராக முஷ்டி முறுக்குகிறது என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்க பெரும்பாலான அமைச்சர்களும் நிர்வாகிகளும் மறுக்கின்றனர். சசிகலாவை எப்படி ஏற்பது, அவருடன் தினகரனும் கட்சிக்குள் வந்தால் என்ன செய்வது போன்ற மில்லியன் டாலர் கேள்விகள் எடப்பாடி வசம் தொக்கி நிற்கிறது. இதனால், எடப்பாடி தரப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே கருத்து கூறிவரும் நிலையில், எடப்பாடியின் தீவிர ஆதரவாளரான அமைச்சர் கே.சி. வீரமணி,  சசிகலாவுக்கு எதிராக கொந்தளித்திருக்கிறார். வேலூரில் செய்தியாளர்ளிடம் பேசிய அவர்,  தமிழகத்தில், சசிகலாவை எதிர்த்துத்தான் அதிமுக கட்சியும், ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அவர்கள் தேவை இல்லாதவர்கள், மக்களால் வெறுக்கப்படக் கூடியவர்கள். அதிமுகவினர் தெளிவாக உள்ளனர். முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் எந்த சர்ச்சைகளும் இல்லை. எல்லாம் நல்லபடியாகவே சென்று கொண்டுள்ளது என்றார்.

இது, கே.சி. வீரமணியின் சொந்தக் கருத்தா, அல்லது, தான் நினைப்பதை, வீரமணி மூலம் எடப்பாடி வெளிப்படுத்தினாரா என்பதே அதிமுகவில் விவாதமாக இருக்கிறது. இதுபோன்ற கருத்துகள் தங்கள் தரப்பை வலுவாக்குவதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதிமுக செயற்குழு கூட்டம் விரைவில் கூட உள்ள நிலையில், கே.சி. வீரமணியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry