புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், அமைச்சருமான நமசிவாயம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி வன்னியர்களை ஒதுக்குவதால், தான் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம் கருதி, அவர் கட்சி மாறும் முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
2016 சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால், நமசிவாயம்தான் முதலமைச்சர் என புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலும் உறுதியாக நம்பப்பட்டது. அப்போது, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் அவர் இருந்தார்.
என்.ஆர். ஆட்சி மீதான அதிருப்தியாலும், நமசிவாயம் வன்னியர் என்பதாலும், அந்தச் சமூக வாக்குகளை பெருமளவில் அறுவடை செய்து, காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றது. நமசிவாயம் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே போடப்பாட்ட வாக்குகள்தான் அவை. ஆனால், திடீர் டிவிஸ்டாக, தேர்தலிலேயே போட்டியிடாத நாராயணசாமி மேலிட செல்வாக்கால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நமசிவாயத்தை சமாதானப்படுத்திய டெல்லி தலைமை, முக்கியத்துவம் வாய்ந்த பொதுப்பணித்துறையை அளிப்பதாகவும், அமைச்சரவையில் இரண்டாவது இடம் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், முதலமைச்சரான நாராயணசாமி வன்னியர் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிவிட்டு, கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சி தங்களை புறக்கணித்துவிட்டதாக, புதுச்சேரியில் உள்ள வன்னிய சமூகத்தினர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
தனக்கு நிகரான தலைவராக வளர்ந்து நிற்பதோடு, தன்னை கேள்வி கேட்கும் நமசிவாயத்தை ஓரங்கட்ட வேண்டும் என்ற உத்தியுடன், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்று கூறி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நமசிவாயத்திடம் இருந்து பறிக்க வைத்தார் நாராயணசாமி.
முதலமைச்சர் நாற்காலி பறிப்பு, கட்சித் தலைவர் பதவி பறிப்பு என நாராயணசாமியின் அடுத்தடுத்த காய் நகர்த்தல்களால், நமசிவாயமும், அவரது ஆதரவாளர்களும் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இனிமேலும் பொறுமை காப்பது சரியாக இருக்காது, உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நமசிவாயத்துக்கு ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
நான்கரை ஆண்டு கால ஆட்சியில், மக்கள் நலத்திட்டங்கள் எதையுமே செய்யாமல், அனைத்துக்கும் ஆளுநரை காரணம் காட்டி நாராயணசாமி தப்பித்து வருகிறார். இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், மின் கட்டண உயர்வு ஆட்சி மீதான கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது தேர்தலிலும் எதிரொலிக்கும் என நமசிவாயத்தின் நலம் விரும்பிகள் அவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
ஆதரவாளர்கள் அழுத்தம், நலம் விரும்பிகளின் யோசனை போன்றவற்றால், நமசிவாயம் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, தனக்கு மிக நெருக்கமான ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஆதரவாளர்களுடன் இணைவது என அவர் தீர்மானித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கினார். அப்போதே, புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரசை தொடங்க நமச்சிவாயம், வாசனிடம் பேசியுள்ளார். ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராகும் வாய்ப்பு இருப்பதால், தனது கட்சிக்கு வரவேண்டாம் என நமசிவாயத்திடம் வாசன் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்படாது என்று உறுதியையும் அப்போது அவர் கொடுத்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரியில், இதுவரையில், தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்படவில்லை. இருவருக்குமான இணக்கத்தை இதன் மூலமே தெரிந்துகொள்ளலாம் என நமசிவாயம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தன்னை அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட, வரும் தேர்தலே சரியான காலகட்டம் என நமசிவாயம் நம்புவதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.
வன்னியர் சமூகத்தினர் காங்கிரஸை புறக்கணிக்க முடிவு செய்துவிட்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸில் இணைவது பற்றி, தனது மாமனாரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமியிடம், குடும்ப உறுப்பினர்கள் மூலம் நமசிவாயம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அங்கிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததாக கூறப்படும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 முதல் 7 இடங்கள் வரை தருவதாக வாக்கு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் புத்துணர்ச்சி பெற்றுள்ள நமசிவாயம், ஜி.கே. வாசனுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியின் முகமாக பார்க்கப்பட்ட நமசிவாயம், நாராயணசாமியின் நடவடிக்கைகளால், கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல், கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் உடையும் நிலையில் இருப்பதால், நமசிவாயம் கட்சியிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதேநேரம், புதுச்சேரியில் புதிய கட்சி உதயமாக உள்ளதால், மாநில அரசியலில் இப்போதே தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry