எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க ஓபிஎஸ் தயார்! கட்சியை முழுமையாக ஒப்படைக்க நிபந்தனை! ராஜினாமா வதந்திக்கு முற்றுப்புள்ளி!

0
14

எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் மன நிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் வந்துவிட்டார். ஆனால், கட்சியை முழுமையாக தம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கும் அவர், சட்ட ரீதியாக இதைச் செய்துகொடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி, .பன்னீர்செல்வம் இடையே நடந்த காரசார விவதாங்களின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை வேல்ஸ் மீடியா வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரு முகாம்களிலும் பெரும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துவந்தன.

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் உடனான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த ஓபிஎஸ், ஆதரவு நிர்வாகிகளுடன் வீட்டில் ஆலோசனை நடத்தினார். இதற்கு பதிலடி தரும் விதமாக, சென்னை பெருநகர மாநகராட்சியின் விழாவுக்கான விளம்பரத்தில் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை.

இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை ஓபிஎஸ் உணர்ந்ததாக தெரிகிறது. இதையடுத்து, கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவு நிர்வாகிளுடன் ஓபிஎஸ் பல மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக சட்ட நிபுணர்கள் பலரும் இதில் இடம்பெற்றுள்ளனர். எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பெரும்பாலான அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், இனிமேலும், பிடிவாதமாக இருப்பது பயன்தராது என்று ஓபிஎஸ் இடம் அவர்கள் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றாகிவிட்ட நிலையில், கட்சியை சட்ட ரீதியாக வசப்படுத்த என்ன செய்யலாம் என்றும் அவர்கள் ஆலோசனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாம் இணையும்போது அளித்த வாக்குறுதிகளை எடப்பாடி தரப்பு நிறைவேற்றவில்லை என்று கூறும் ஓபிஎஸ், அவர்களுக்கு எப்படி கிடுக்கிப்பிடி போடலாம் என விவாதித்துள்ளார்.

தற்போதைய நிலையில், ஆட்சியில் முதலிடத்தில் இருக்கும் எடப்பாடி, கட்சியிலும் முதலிடத்தில்தான் இருக்கிறார். அதைப்போன்று இல்லாமல், கட்சியை முழுமையாக தன் வசம் ஒப்படைத்தால், எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கத் தயார் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது. தம்மை சந்திக்க வந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மூலம் இந்தத் தகவலை அவர் எடப்பாடி முகாமுக்க தெரியப்படுத்தி உள்ளார். வாய்மொழி ஒப்பந்தத்தை ஏற்க தான் தயாராக இல்லை என்பதையும் அவர் உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியை ஒப்படைக்க அவர்கள் சம்மதித்தால், அதை சட்ட ரீதியாக உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் தீர்மானித்துள்ளார். இதற்காகவேதான், சட்ட நிபுணர்களை அவர் கலந்தாலோசித்து வருகிறார். தனது நிபந்தனைகள் ஏற்கப்படும்பட்சத்தில், 7-ந் தேதி, எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வமே அறிவிப்பார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

அதேநேரம், எடப்பாடி பழனிசாமி, . பன்னீர் செல்வம் இருவருமே சசிகலாவை ஏற்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என பிரித்துக்கொள்ளும்பட்சத்தில், சசிகலாவை கட்சிக்குள் விட்டால், அனைத்துமே அவர் வசம் சென்றுவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  சசிகலாவுக்கு ஆதரவாக குரல்கொடுத்த அமைச்சர்களையும் எடப்பாடி பேசி சரிகட்டியுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சசிகலாவுக்கு அதிமுகவுக்கு இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஓபிஎஸ் க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பதால், அதிமுகவில் சில நாட்களாக நிலவி வந்த சலசலப்பு அடங்கும் எனத் தெரிகிறது. அதேபோல், கார் கொடியை கழற்றிவிட்டார், துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய்பபோகிறார் என்ற தகவல் வதந்தி என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆனால், ஓபிஎஸ் நிபந்தனையை எடப்பாடி தரப்பு நிராகரித்தால் மட்டுமே, அதிமுகவுக்குள் மீண்டும் பிரச்னை தலைதூக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry