ஆ.ராசா கூறியது திமுக தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

0
126

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கடந்த 6-ந் தேதி வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஆ.ராசா மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்துக்கள் குறித்த ஆ.ராசாவின் பேச்சை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. சார்பில், சென்னை வடபழநியில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போது தி.மு.க., – எம்.பி.யாக இருப்பவருமான ஆ.ராசா, இந்துக்களை சொல்லக்கூடாத, கீழ்தரமான வார்த்தையை கூறி விமர்சித்துள்ளார். இது நாட்டு மக்களுக்கு பொருந்துமா; அவரது தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா தி.மு.க. தலைவரின் மருமகன், திருச்செந்தூரில் யாகம் நடத்தியுள்ளார், அவருக்கு பொருந்துமா? என்பதை கூற வேண்டும்.

Also Read : தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்! சாப்பாட்டிலேயே கைகழுவிய முதலமைச்சர்!

மதுரையில் ஒரு அமைச்சர், 30 கோடி ரூபாய் செலவு செய்து, திருமணம் நடத்தி உள்ளார். இந்தப் பணம் எப்படி வந்தது? மீண்டும் அ.தி.மு.க., அரசு அமையும்போது, இதை தோலுரித்து காட்டுவோம். முதல்வர் ஸ்டாலின் இதுவரை 38 குழுக்கள் போட்டுள்ளார். ஸ்டாலின் தலைமையில், ‘குழு அரசு’ செயல்படுகிறது. அமைச்சர்கள், செயலர்கள், அரசு அதிகாரிகளை நம்பாமல், குழு போடுகிறார்.அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும், உயர்ந்த நிலைக்கு வர முடியும். எனக்கு பின் பலர் வருவர் எனக் கூறுகிறேன். அதுபோல் ஸ்டாலின் கூற முடியுமா?” இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே, இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட பாஜக பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான வெங்கடாசலம், நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ஆ.ராசா இந்து மதத்தைப் பற்றி மிகவும் அவதூறாகப் பேசியது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்து மதத்தையும், இந்து மக்களையும் எம்பியாக இருக்கும் ராசா மிகவும் அநாகரிகமாகப் பேசுகிறார். ஒரு இந்துவாக இது எனக்குத் தாங்க முடியாத துயரத்தைக் கொடுத்துள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Also Read : வேகமாகப் பரவும் இன்புளூயன்சா காய்ச்சல்! எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!

இந்துக்களை அசிங்கமாகவும் கொச்சைப்படுத்தியும் பேசும் ஆ.ராசாவை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்யத் தயாராக உள்ளதாக, கரூரில் செய்தியாளர்களிடம் சிவசேனா இளைஞர் அணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சி மற்றும் சிவ சேனா கட்சி சார்பில் ஆ. ராசா மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்துள்ளனர்.

இதனிடையே, திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் கரூர் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தோகைமலை ஒன்றிய பாஜக, குளித்தலை நகர மற்றும் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குளித்தலை காவல் நிலையம் மற்றும் தோகைமலை காவல்நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை நகர தலைவர் கணேசன், குளித்தலை ஒன்றிய தலைவர் பொன் ரஞ்சித் குமார், தோகைமலை ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப் ஆகியோர் தலைமையில் புகார் மனு தரப்பட்டது. கரூர் மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் ராஜாளி செல்வம், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் மக்கள் சாமிநாதன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry