தமிழகம் முழுவதும் 2,381 மையங்களில் எல்கேஜி -யுகேஜி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டுள்ள தொடக்கக் கல்வித்துறை, தற்பொழுது ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாத நிலையில், அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, அரசு ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கிவந்த 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்திற்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
தொடர்ந்து அரசு பள்ளி வளாகங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மீண்டும் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றும், சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். மற்ற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை மட்டும் நடைபெறாமல் இருந்து வந்தது.
Also Read : LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய அமைச்சர்!
இந்நிலையில், தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவொளி இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ஏற்கெனவே இயங்கி வந்த 2,381 மையங்களில் மீண்டும் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை நடத்தலாம். ஒரு மையத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் 2,381 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டி இருக்கிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் வரை, அங்கு உள்ள அங்கன்வாடி மையப் பணியாளர்களை ஒருங்கிணைத்து வகுப்புகள் நடத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்கேஜி , யுகேஜி மாணவர்கள் பாதுகாப்பு பொறுப்பை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். மற்ற குழந்தைகள் வழக்கம் போல் அங்கன்வாடி மைய குழந்தைகளாக கருதப்பட வேண்டும். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை எல்கேஜி வகுப்பிலும், நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்க வேண்டும்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : TET தேர்வு சரி; NEET தேர்வு தவறா? டெட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்குமா? வேல்ஸ் பார்வை!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry