தவிர்ப்போம் ஆங்கிலப் புத்தாண்டை! ஆகமத்தையும் ஆட்டிவைக்கும் மேற்கத்திய மோகம்! வேல்ஸ் பார்வை!

0
141

உலகம் தோன்றிய தினத்தைத்தான் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும். இதைத்தான் இந்து தர்மமும் போதிக்கிறது. ஆனால், தற்சமயம் பாரோரால் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டானது, கிறிஸ்து பிறப்பின் அடிப்படையில், ரோமன் ஜுலியன், கிரிகோரியன் நாட்காட்டிப்படி, டிசம்பர் 31-ந் தேதி ஆண்டின் கடைசி நாளாகவும், ஜனவரி-1 தொடக்கமாகவும் இருக்கிறது.

காதைச் செவிடாக்கும் இசைச் சத்தம், போதையில் நடனம், சகித்துக்கொள்ள முடியாத நடத்தை, வாணவேடிக்கை என அனைத்து ஒழுங்கீனங்களும் முடிந்து போதை மயக்கத்தில் அதிகாலை வீடு திரும்புவதுதான் பெரும்பாலானோரின் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்ட வரையறை.

வேத மரபின்படி, சாத்வீகம், இராஜசம், தாமசம் என்ற குணங்களே அனைத்திற்குமான அடிப்படை. டிசம்பர் 31-ம் நாள் தன்னிலை மறந்து, மதுகாட்டும் வழியில் ஆடுவோருக்கு இராஜச, தாமச குணங்கள் மேலோங்கும். எனவே, ஜனவரி-1ல் பெரும்பாலானவர்கள் போதை தாக்கத்தால் சயனத்தில் இருப்பார்கள். அந்த நாள் அவர்களுக்கு சபிக்கப்பட்டதாகவே அமையும்.

பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின்போது, இந்து தர்மமானது சிதைக்கப்பட்டு அல்லது முற்றிலுமாக மறைக்கப்பட்டதை, நம்மவர்கள் மறந்துவிட்டனர். 18,19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரை, மனதார வரித்துக்கொண்டு, மேற்கத்திய மோகத்துக்கு மூன்று தலைமுறைகளாக நம்மவர்கள் அடிமையாகிக் கிடக்கின்றனர். மதச்சார்பின்மைநாகரீகம் என்ற பெயரில், கிறித்துவ கலாச்சாரத்தை இந்துக்களின் மீது திணிப்பதை, பெரும்பாலான ஊடகங்களும் சிரமேற்கொண்டு செய்கின்றன. இதனால் வயப்பட்ட பாரத தேசத்தினர், இதுதான் நமது கலாச்சாரம், பண்பாடு என்று நிலையாகிவிட்டனர்.

கூறாய்ந்து பார்க்கும்போது, ஆகமத்திலும் இதன் தாக்கம் ஆழ ஊன்றிவிட்டது. கோவில்கள் காட்சிப் பொருளாக்கப்படுகின்றன; ஜோதிடர்கள் ஆங்கிலப் புத்தாண்டுப் பலன் என பக்கம் பக்கமாக பேசுகின்றனர். ஆகம விதிகளை மீறி, ஆங்கிலப் புத்தாண்டு தின இரவில் சிறப்பு வழிபாட்டுக்காக கோவில்கள் திறக்கப்படுகின்றன. நடு இரவில் கோவிலைத் திறந்து வழிபாடு நடத்தினால், அரசுக்கு கேடு வரும், மழை குறையும், களவு அச்சம் அதிகரிக்கும் என்கிறார் திருமூலர். நித்திய பூஜைகள், சிறப்பு பூஜைகள் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதை ஆகமம் தெளிவாக வரையறுத்துள்ளது.

பிரம்ம முகூர்த்த வேளையான காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட வேண்டும், இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட வேண்டும் என்பது ஆகம விதி. இந்த விதியானது, அறுவடைத் திருநாள், தீப ஒளித் திருநாள், பிராந்திய புத்தாண்டு தினங்கள் என மரபு வழிப் பண்டிகைகளுக்கு மீறப்படுவதில்லை. ஆனால், ஆங்கிலப் புத்தாண்டான, வேற்று மத பண்டிகைதின இரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நெறி தவறிய வழிபாடு செய்வது, ஆங்கில கலாச்சாரத்தை இந்துக்கள் விரும்பி ஏற்பதுபோலத்தான் தெரிகிறது.

விஞ்ஞானமும், மெய்ஞானமும் உணர்த்துவதன் அடிப்படையில், வைகறையில் தான்(அதிகாலை 4.30-6.00) கோவில் நடை திறக்க வேண்டும், யாமத்தில்(இரவு 9 மணி) கோவில் நடை அடைக்கப்பட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், எந்த வழிபாடும் கூடாது என்பதே ஆகம விதி. இவைகள் அனைத்தையும் மீற வைக்கிறது ஆங்கில கலாச்சார மோகம்.

நான் ஒருவன், நான் பல வடிவங்களில் வெளிப்படுவேன்என்று ஈசனை குறிப்பிட்டு பிரபஞ்சம் உருவாக்கப்பட்டதாக சாண்டோகி உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. அறிவியலாலளர்கள் கூற்றுப்படி, 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பெரு வெடிப்பு கோட்பாடு அடிப்படையிலேயே பிரபஞ்சம் உருவானதாக நம்பப்படுகிறது.  உலகின் ஆன்மீக வழிகாட்டியான பாரத தேசத்தில், பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்து கால அளவை சரியாகக் கணக்கிடும் தெய்வீகத் திறனை நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர்.

சூரியனின் இயக்கம், சந்திரன் மற்றும் கோள்களின் இயக்கம், சூரிய உதய திதி அடிப்படையில் இந்து நாட்காட்டியை உருவாக்கிய அவர்கள், சித்திரை மாதத்தையே ஆண்டின் தொடக்கமாக நிர்மாணித்தனர்.  இதனையே தமிழ்க்குடிகள் சித்திரைத் திருநாளாகவும், கேரளத்தினர் விஷூப் பண்டிகையாகவும், ஏனைய தென் மாநிலத்தவர்கள் உகாதி என்றும் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர்.

மாறாக, எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாமல், கிறிஸ்துவுக்கு பெயர் சூட்டிய தினத்தை புத்தாண்டு தினமாகக் கொண்ட, பாரதத்தில் கால்பதித்து நானூறு ஆண்டுகளே ஆன ஒரு மதம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மதத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு நெறிமுறைகளை மண்ணிலிடுவதற்கு, பூர்வகுடிகளையே பலிகடாவாக்கி, தன்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது. இதனை உணராமல், கொண்டாட்ட மோகத்தில் லயித்திருக்கும் மக்கள், இனியாவது சித்தம் தெளிந்து, மரபு வழி உணர்ந்து, வலிந்து திணிக்கப்பட்டுள்ள மேலை கலாச்சாரத்துக்காக, பாரம்பரிய வழிமுறைகளை பலிகொடுத்து விடக்கூடாது.

வரும் தலைமுறையினருக்கு, நம் பாரத கலாச்சாரத்தின் புனிதத்தை போதிப்பதைக் காட்டிலும், ஆங்கில கலாச்சார மோகத்தின்பால் ஏற்பட்டுள்ள ஒழுக்க சீர்கேடுகளைப் பற்ற வைக்காமல் இருத்தலே அவசியமானது.  ஆங்கிலப் புத்தாண்டு இந்தியர்களுக்கானது அல்ல என்பதை இனியாவது உணர வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry