ஏகாந்த நிலையில் ரஜினிகாந்த்! துணிச்சலான முடிவு என ரசிகர்கள் ஆதரவு! ஆன்மிக வாக்குகள் சிதறாது என்பதால் அதிமுக குஷி!

0
22

அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பை, ரஜினியை நேர்மையாக புரிந்துகொண்ட ரசிகர்கள் வரவேற்கின்றனர். ரஜினியின் முடிவால், நடுநிலை இந்துக்களின் வாக்குகள் சிதறாமல் கிடைத்துவிடும் என அதிமுக மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

ஆன்மிக முகம் காட்டிய ரஜினி

ரஜினிகாந்த்துக்கு அரசியலுக்கு வருவதில் முழுமையான விருப்பம் இருந்ததில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, புற அழுத்தம் காரணமாகவே, அரசியலுக்கு வரும் முடிவை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டார்.

அதற்கேற்றார்போல, பாஜகவும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் ரஜினியின் அரசியல் வருகைக்கு அழுத்தம் கொடுத்தனர். அதேநேரம், செலவில்லா அரசியல் என நெருக்கடி கொடுத்தார் லதா ரஜினிகாந்த். ஆனால், ரசிகர்களை நினைத்து மருகிய ரஜினிகாந்த், அவர்களது வாழ்வாதாரத்தை நினைத்து பெரிதும் கவலைப்பட்டார்.

புற அழுத்தங்களால் சில நடவடிக்கைகளில் இறங்கினாலும், சில குறியீடுகள் மூலமாக (ராகவேந்திரா திருமண மண்டப விவகாரம், பொதுவெளிக்கு வராதது, ஆஷ்ரம் பள்ளி விவகாரம், ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி) தனது எண்ணத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். ரசிகர்கள் நிர்கதியாகிவிடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கிய நிலையில், எந்தப் பிரச்சனை வந்தாலும் சந்திக்கலாம் என துணிச்சலாக முடிவெடுத்து, அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்துள்ளார். ஒரு ஆன்மிகவாதியாகவும், ரசிகர்களை காப்பாற்றிவிட்ட மனநிறைவுடனும், மனபாரம் நீங்கி, ஏகாந்த நிலையில், நித்தியப் பேரானந்தத்தில் ரஜினிகாந்த் திளைக்கிறார்.

ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ரஜினி அறிவிப்புக்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், அதிருப்தியும் கலந்தே காணப்படுகிறது. ரஜினியை நன்கு உணர்ந்தவர்கள் அல்லது புரிந்தவர்கள், அவரது முடிவை வரவேற்கின்றனர். சிறந்த ஆன்மிகவாதியான ரஜினிக்கு, அரசியல் பயணம் இனிக்காது என்பது தெரியும் என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், உண்மை புரியும்போது தாங்கள் கைவிடப்படவில்லை என்பதை ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள். ஆல் டைம் சூப்பர் ஸ்டார் அவர்தான், அவரை தலையில் வைத்து கொண்டாட தயார், ஆனால், அரசியல் தலைவராக அவரால் செயல்பட முடியாது, நடிக்க முடியாது.

பாஜக உள்பட யாரையும் அவர் ஏமாற்றவில்லை, ரஜினியின் வெளிப்படைத் தன்மையை அனைவரும் புரிந்துகொள்வார்கள். இனி நாங்கள் எங்கள் வேலையை பார்ப்போம், மற்ற கட்சிகள் ரஜினிக்காக காத்திருக்காமல் வியூகங்களை வகுப்பார்கள். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், கட்சியில் லதா ரஜினிதாந்த்தின் பங்கு பெரிதாக இருந்திருக்கும். பூக்கடை நடராஜன், சத்தியநாராயணா போன்ற நிர்வாகிகள் மட்டுமல்ல, ரசிகர்களும் லதாவால் மனம் புண்பட்டிருக்கிறோம். ஆனால், ரஜினி என்ற ஒருவருக்காக அதையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம். எனவே ஒளிவுமறைவின்றி ரஜினி எடுத்த முடிவை மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்என்று கூறுகின்றனர்.

திமுக என்ன நினைக்கிறது?

உதயநிதியை களமிறக்கியும் நிலைமை சாதமாக மாறாத நிலையில், திமுகவுக்கு ரஜினி பெரும் தலைவலியாகவே இருந்தார். இவரால் கள சூழல் மாறி, அது தங்களுக்கு சரிவைத் தருமோ என ஸ்டாலினும், பிரசாந்த் கிஷோரும் கருதினார்கள். தற்போதைய ரஜினியின் அறிவிப்பால், வாக்கு வங்கிக்கு பாதகம் ஏற்படாமல் போனதே என ஸ்டாலின் மகிழ்ச்சியடைகிறார். ஏனென்றால், பாதிக்கும் மேலான ரஜினி ரசிகர்கள் திமுகவில்தான் இருக்கிறார்கள். இதுநாள் வரை அவர்கள் திமுகவினராகவே அறியப்பட்டவர்கள். இதன்காரணமாக திமுகவின் வாக்கு வங்கி காப்பாற்றப்பட்டிருக்கிறதே தவிர, கூடுதல் வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவு.

அதிமுகவுக்கு ஏன் சாதகம்?

ஒப்பீட்டளவில் திமுகவைவிட அதிமுகவுக்கான வாக்கு வங்கி அதிகம் என்றே சொல்லலாம். எப்படியென்றால், 1956 தொடங்கி, கடந்த 2016 வரை நடைபெற்ற 15 தேர்தல்களில், திமுக, 10 முறை இரண்டிலக்க இடங்களில்தான்(Double Digit) வெற்றி பெற்றுள்ளது.

இதோடு ரஜினி அறிவிப்பை பொருத்திப்பார்த்தால், அதிமுகவுக்கு ரஜினியால் பாதகம் இல்லை. ரஜினிக்கு அரசியலுக்கு வர தைரியமில்லை, தாங்களே மிகச்சிறந்த ஆளுமை என்ற ரீதியிலேயே அதிமுக தலைவர்களின் பிரச்சாரம் அமையலாம்.

திமுக மீது வருத்தத்தில் உள்ள நடுநிலை வாக்காளர்கள், குறிப்பாக இந்து ஆதரவு வாக்குகளார்கள் இந்த தேர்தலில் முக்கியப் பங்காற்றுவார்கள். பாஜக மற்றும் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய இந்த வாக்குகள், ஒருவேளை ரஜினி கட்சி துவங்கியிருந்தால், அவர் பக்கம் சாய்ந்திருக்கும். தற்போதைய சூழலில், நடுநிலை வாக்களார்கள் அதிமுகவுக்கு சாதகமாக முடிவெடுக்கலாம். இந்து ஆதரவு நடுநிலை வாக்குகள் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பிரிய வாய்ப்புள்ளது. இறுதியாக பார்த்தால், ரஜினி எடுத்த முடிவு, திமுக வாக்கு வங்கியை காப்பாற்றியிருக்கிறது, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக களசூழலை மாற்றியிருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry