30-10-2023 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஒரு மனுவை சமர்ப்பித்திருக்கிறது ஓ.என்.ஜி.சி. எனப்படும், இந்தியாவில் பெருத்த லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனமான Oil and Natural Gas Corporation.
இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாலுகாவிலும் சர்வதேச நாடுகள் தடை செய்த நீரியல் விரிசல் முறையில் (hydraulic Fracturing) 2000 முதல் 3000 மீட்டர்கள் ஆழத்திற்கு 20 சோதனை கிணறுகளைத் தோண்டி, ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக விண்ணப்பித்திருக்கிறது.
சோதனை முறையில் 20 கிணறுகளை தோண்டுவதற்காக ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்திருக்கும் 1403.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு, ஏற்கனவே மத்திய அரசிடம் அனுமதி பெற்றுவிட்டது என்பது தான் இங்கு செய்தி. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய Hydrocarbon Exploration and Licensing Policy அடிப்படையில் மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலம் மூலம் இந்த அனுமதியைப் பெற்ற O.N.G.C. காத்திருப்பது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதிக்காக மட்டுமே.
இந்த 1403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில், சமவெளியில் 1259.44 சதுர கிலோமீட்டரும், ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 சதுர கிலோமீட்டரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் என்றால் வெறும் வானம் பார்த்த பூமி என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே 1 லட்சத்து 72 ஆயிரத்து 469 ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடந்து வருகிறது என்பது நாம் எல்லாம் அறியாத செய்தி.
அதிலும் 63 ஆயிரத்து 800 ஹெக்டேர் பாசனம் நேரடி பாசனமாக இருந்து வருகிறது.1,694 கண்மாய்களும், 7,321 கிணறுகளையும் கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய சாகுபடியாளர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 767 பேர். ஏற்கெனவே இங்கு அதானி குழுமம் 4,450 கோடி ரூபாய் முதலீட்டில், 648 மெகாவாட் மின்சாரம் எடுக்கும் உலகத்தின் 12 வது சோலார் பூங்காவை அமைத்து முடித்துவிட்ட நிலையில், இப்போது O.N.G.C. ராமநாதபுரத்தை குறி வைத்திருக்கிறது.
இதைவிட கொடுமையாக, ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஒரு உரிமம் மட்டும் பெற்றால் போதும், அதைக் கொண்டே அப்பகுதியில் கிடைக்கும் மீத்தேன் உள்ளிட்ட அனைத்து வகை கரிமங்களையும் எடுக்க முடியும் என்கிறது மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை. இன்னும் கொடுமையாக நீரியல் விரிசல் முறையில் இங்கு ஹைட்ரோ கார்பன் சோதனை நடைபெற வந்திருப்பதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தடை செய்துவிட்ட நீரியல் விரிசல் முறை என்பது, இயற்கைக்கு எதிரான தொழில்நுட்ப பயன்பாடு. அதாவது வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவே உள்ள மீத்தேன் எரிவாயு எப்படி எடுக்கப்படுமோ, அதுபோலத்தான் ஹைட்ரோ கார்பன் வளமும், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் வளம் செழித்த கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கம்பம் மெட்டு அருகே, சோதனை முறையில் நான்கு ஆழ்துளைக் கிணறுகளை தோண்டியது. மாவட்ட நிர்வாகத்தால் கண்டு கொள்ளப்படாத அந்த நடவடிக்கையை எதிர்த்து நின்றது எங்களுடைய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம். என்ன நோக்கத்திற்காக அங்கு நான்கு ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டது? மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெறப்பட்டு தோண்டப்பட்டதா, இல்லையா? என்பது குறித்து பதிலளிக்காமல் தேனி மாவட்ட ஆட்சியர் இன்று வரை மௌனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, ஹைட்ரோ கார்பன் எண்ணெய் எரிவாயு திட்டங்களால், டெல்டா மாவட்டங்களில் நிலமும், நீரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கழிவுகளை கையாண்ட முறையில் தவறு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், எதையும் கண்டுகொள்ளாமல் O.N.G.C.யும், இந்தியப் புவியியல் ஆய்வு மையமும் தென் தமிழகத்தை குறி வைத்திருப்பது அச்சமாக இருக்கிறது.
ஏற்கனவே அரியலூரில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகளையும், கடலூரில் ஐந்து ஆழ்துளை கிணறுகளையும் சோதனை முறையில் தோண்டுவதற்காக O.N.G.C.யால் கோரப்பட்ட அனுமதியை 2021 ஆம் ஆண்டு நிராகரித்து உத்தரவிட்ட தமிழக அரசின் நடவடிக்கையை இப்போதும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
காவிரிப் படுகை மண்டலத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது போல, தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் அடங்கிய பெரியாறு – வைகைப் படுகையையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அந்தப் பகுதிகளை காக்க வேண்டும். அரசு இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த அப்பாவிகளை காக்கும் என்று நம்புகிறோம்.
கட்டுரையாளளர் : ச. அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry