தமிழக கேரள எல்லையை முறைப்படி மத்திய சர்வே துறை மேற்பார்வையில் அளவீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் சொன்னால், இங்கே நிறைய பேர் அதை பிரிவினை வாதம் என்கிறார்கள்.
எல்லையோரத்தில் வாழக்கூடியவர்களுக்குத்தான் பறிபோன நிலங்களின் அருமை தெரியும். என்னைப்பெற்ற தாய் அய்யம்மா பிறந்த கட்டளை குடியிருப்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையின் கீழ் இருந்த ஒரு கிராமம். 1956 மொழிவழிப் பிரிவினைக்கு பிறகு தான் எனது தாய் கிராமம் தமிழகத்தோடு இணைந்தது. அதாவது 1956 நவம்பர் 1ல்…!
நீதியரசர் பசல் அலி தலைமையிலான மொழி வழி பிரிவினை குழுவில் இடம் பெற்றிருந்த கேரளாவை சேர்ந்த கே.எம். பணிக்கர் தான், எங்களுக்கான பிரதான பிரச்சனையே. பிரிவினைக் கமிட்டியின் தலைவர் நீதியரசர் பசல் அலியையே மீறி பல இடங்களில் தன்னுடைய ஆளுகையை செலுத்திய கே. எம்.பணிக்கர் செய்த வேலைகளை அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் நம்பத் தயாரில்லை.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், வயநாடு ஆகிய தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்களில், இன்னமும் முழுமையடையாத எல்லையை, முறைப்படி வரையறுக்க வேண்டும் என்று சொல்கிறோம். இதில் என்ன தவறு இருக்க முடியும். மொழிவழிப் பிரிவினை கமிட்டியின் உறுப்பினராக இருந்த மலையாளியான பணிக்கர் 1956இல் கமிட்டி கொடுத்த வரைபடத்தை மாற்றியதோடு, தமிழகத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள பெரிய இடங்களை கேரளாவின் வரைபடத்திற்குள் கொண்டு வந்தார் என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறது.
தேவிகுளம், பீரிமேடு மற்றும் உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களும் சட்டப்படி தமிழகத்தின் பக்கம் வந்திருக்க வேண்டும். ஆனால் அதை கேரளாவின் பக்கம் தள்ளி விடுவதற்காக, ஈ.வெ.ராமசாமியை திருச்சியில் வந்து சந்தித்து, லாவகமாக அவரை விட்டே அறிக்கை விட வைத்து, அதை காமராஜரின் அறிக்கையாக மாற்றினார். குளமாவது மேடாவது என்கிற புகழ்பெற்ற வசனம், ஈ.வெ. ராமசாமியால், பெருந்தலைவர் காமராஜருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வசனம்.
கடந்த 2022 நவம்பர் ஒன்றாம் தேதி கேரளா அரசால் என்டே பூமி என்கிற பெயரில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் ரீ சர்வே, கேரளாவில் உள்ள 200 கிராமங்களில் ஓரளவு நிறைவை எட்டும் தருவாயில் இருக்கிறது. இதுகுறித்து எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறது தமிழக அரசு. இந்த டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக கடந்த 2022 நவம்பர் 11 ஆம் தேதி எங்கள் சங்க நிர்வாகிகள், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரனை சந்தித்து கொடுத்த மனு காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.
தமிழக கேரள எல்லையோரம் கேரளாவில் உள்ள, நெய்யாற்றின் கரை, கட்டகடை, நெடுமங்காடு, புனலூர்,கோன்னி, பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம், பாலக்காடு, மன்னார்காடு, சித்தூர், நிலம்பூர், வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி உள்ளிட்ட 15 தாலுகாக்களிலும், முறைப்படி தமிழக கேரள எல்லையை அளக்காமல், கேரள அரசு ஒருதலைப்பட்சமாக டிஜிட்டல் ரீ சர்வேயை செய்து முடித்திருக்கிறது.
Also Read : Bajaj Bruzer 125 CNG Bike! ஆட்டோமொபைல் உலகை ஆட்டிப்படைக்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்?
அதே நேரத்தில் கேரளாவோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள், கேரளாவின் இந்த நடவடிக்கை குறித்து, தமிழக அரசுக்கு எவ்வித குறிப்பும் இதுவரை அனுப்பவில்லை என்பதை நாங்கள் உணர்ந்த பிறகு தான், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்தோம்.
கேரள மாநில அரசு டிஜிட்டல் ரீ சர்வேயை நடத்துகிறது என்று தெரிந்தும், அது குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல், அது குறித்து ஒரு குழு அமைத்து கேரளாவோடு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல், அரசு கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவுதான் எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை. இதற்காக நாங்கள் நடத்தப் போவது சட்டப் போராட்டம் மட்டுமே. அதைத் தாண்டிய எந்த நடவடிக்கையும் எங்களிடத்தில் எப்போதும் இல்லை.
உள்ளபடியே மொழிவழி பிரிவினை கமிட்டி கொடுத்த, ஒரு மொழி பேசுவோர் 33 விழுக்காடு கூட்டமாக இருந்தால், அந்தப் பகுதியை அந்த மொழி பேசக்கூடிய மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என்கிற அடிப்படை விதியையே காற்றில் பறக்க விட்டது நேருவின் அரசாங்கம்.
நெய்யாற்றின் கரை தாலுகா, நெடுமங்காடு தாலுகா, கட்ட கடை தாலுகா, புனலூர் தாலுகா, கோணி தாலுகா, நிலம்பூர் தாலுகா, மானந்தவாடி தாலுகா, சுல்தான் பத்தேரி தாலுகா, கல்பெற்றா தாலுகா, கூடலூர் தாலுகா, பந்தலூர் தாலுகா, பாலக்காடு தாலுகா, செண்பகவல்லி கால்வாய், சிவகிரி தாலுகா, உத்தமபாளையம் தாலுகா, போடி தாலுகா, கொடைக்கானல் தாலுகா, வால்பாறை டூ சாலக்குடி சாலை, அச்சன்கோவில் வனப்பகுதி, பாவோடு வனப்பகுதி, மறையூர் வனப்பகுதி கூடுதலாக மங்கலமடந்தை கண்ணகி கோவில் உள்ளிட்டவை எல்லாம் முறையாக அளக்கப்பட வேண்டும் என்று தான் இந்த களத்தில் நிற்கிறோம்.
பூர்வாங்க வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். என்னிடமிருக்கும் பழைய ஆவணங்களை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வழக்கை நடத்துவோம். இந்த வழக்கு இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இடையே நடந்து வரும் எல்லை பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் என்று நம்புகிறேன். பிரிவினைக்கோ அல்லது வேறெந்த நடவடிக்கைக்கோ, நாங்கள் எப்போதும் காரணமாக அமைய மாட்டோம் என்று உறுதிகூறுகிறேன். எங்கள் நிலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, நாங்கள் நாடப்போவது உச்சநீதிமன்றத்தைத்தானே தவிர, தீவிரவாத குழுக்களை அல்ல…!
கட்டுரையாளர் – ச. அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர் – பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம். மாநில செயலாளர் – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry