எருக்கன் இலை சர்க்கரை அளவைக் குறைக்குமா? பிரமிக்க வைக்கும் மருத்துவப் பயன்கள்! 12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் தெய்வீக மூலிகை!

0
267
Medicinal Benefits of Erukkan Plant

‘தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு என எங்கும் விளையும் தன்மை கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடியான எருக்கு, பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. எருக்கு பொதுவாக காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள் உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும். முற்றிய காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி… அதனுள் உள்ள விதைகள் மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்ளும் சிறப்பு கொண்டது எருக்கு.

எருக்குப் பஞ்சு | Getty Image

இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறுகிறோம். விநாயகர் சதுர்த்தி, ரத சப்தமி தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட நாம் செல்லத் தயங்குகிறோம். உண்மையில் நம்முடைய பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.

”எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது”

என்கிறது, சித்தர்பாடல். மேலும்,

“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல் இலை எருக்கம், ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா..”

நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று கூறாமல் ஏற்றுக் கொள்வார், என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கபிலர் கூறியுள்ளார். “சிவமஞ்சரி”, எனும் நூலில் சிவனுக்கு காலையில் பூஜிக்க சிறந்த மலர், எருக்கம் மலர் எனக் கூறப்பட்டுள்ளது. திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது வெள்ளெருக்கு ஆகும்.

Also Read : ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்! Vels Exclusive!

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இந்த வழக்கம் இன்றைக்கும் கிராமங்களில் உள்ளது. அதனால்தான் ‘ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பண்டைத் தமிழர்கள் பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இலவம் பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.

எருக்குப் பஞ்சு

எருக்கு இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. இதுபற்றி கூறும் பாரம்பரிய மருத்துவ முறை வைத்தியர்கள், பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக, எருக்கு இலையை அரைத்து, கோலிகுண்டு அளவு உள்ளுக்குக் கொடுப்பார்கள். இதன் மூலம் விஷம் இறங்கும். பிறகு, பாதிக்கப்பட்டவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.

தேள் கடித்தால், இதே இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும். மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும். குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.

எருக்கன் செடி | Getty Image

எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும்.எருக்கு இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் சொல்லிக்கொண்டே போகிறார்கள். மட்டுல்லாமல், எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கி, 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும் என்று நம்பப்படுகிறது. இந்த இலையில் சாறு எடுத்து, சில துளிகளை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தந்தால், வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்துவிடும்.

வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். எருக்கன் பால், பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்கிறது சித்த மருத்துவம். எருக்கம் இலைகளை ஒரு துணியில் மூட்டை கட்டி, உப்பு ஒத்தடம் கொடுப்பது போல, அந்த மூட்டையை சூடாக்கி அதை மார்பு, வயிறு, உடலில் வலி இருக்கும் இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர வலி தீரும்.

Also Read : பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு கால்களில் ஏற்படும் குழிப்புண்கள் மாதக்கணக்கில் ஆறாமல் இருக்கும். நாளுக்கு நாள் புண் பெரிதாகிக் கொண்டே இருக்கும். அதுதான் நாளடைவில் கால் விரல்களை எடுக்கும் அளவுக்கு மோசமாக்கிவிடும். அத்தகைய கொடுமையான குழிப்புண்களையும் எருக்குத் தைலத்தைக் கொண்டு ஆற்றிவிட முடியும்.

எருக்கம் இலைச்சாறையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை பஞ்சில் நனைத்து ஆறாத புண்கள் உள்ள இடத்திலும், குழிப்புண்கள் உள்ள இடத்திலும் தினமும் இரண்டு முறை தடவி வர, புண்கள் மிக வேகமாக ஆறிவிடும். இந்த தைலத்தைத் தடவிய பின்பு கைகளை சுத்தமாகச் சோப்பு போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும்.

கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். இதுதான் முழுமுதற் கடவுளான பிள்ளையாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த எருக்கின் வேர்களில் பிள்ளையார் உருவங்களைச் செதுக்கி வழிபடுவார்கள்.

வெள்ளெருக்கு

வெள்ளை எருக்கன் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து. வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.

மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும். ’10கிராம் இஞ்சி, 3 வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்’ என்கிறார்கள், சித்த மருத்துவர்கள். இதையெல்லாம் தாண்டி, எருக்கன் செடியின் பச்சை இலைகளை, செருப்பின் உள்ளே வைத்து நடந்து வர இரத்தச்சர்க்கரை அளவு கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry