அண்மையில் திறக்கப்பட்ட கூட்டுறவு நுகர்வோர் கடைகளில், தரமற்ற காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஆதி திராவிடர் நல விடுதிகளின் வார்டன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாய்மொழி உத்தரவை மீறி, பிற கூட்டுறவு சங்கங்களில் இருந்து மளிகை பொருட்களை வாங்கும் வார்டன்கள், அதிகாரிகளால் குறிவைக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ், சென்னை மாநகரில், பள்ளி விடுதி உள்பட 28 விடுதிகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 3,500 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு உணவுக்கட்டணமாக ரூ.1,100, பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 என அரசு வழங்குகிறது. 1989 ஆம் ஆண்டின் 759வது அரசாணையின்படி, இந்த விடுதிகளுக்கான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு காய்கறி உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
Also Read : தமிழகத்தில் சொத்துவரி மீண்டும் 6% உயர்கிறது! ஏற்கெனவே பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!
திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்கம் (டியுசிஎஸ்) போன்ற தரமான கூட்டுறவு சங்கங்களில் இருந்தே வார்டன்கள் மளிகைப் பொருட்களை வாங்கி வந்தார்கள். ஆனால், வாய் மொழி உத்தரவாக, குறிப்பிட்ட நுகர்வோர் கூட்டுறவு அங்காடிகளில் இருந்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஆதி திராவிடர் வார்டன்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
இதுபற்றி மேலும் பேசிய அவர், “மேலிடம் உத்தரவிட்ட கூட்டுறவு அங்காடிகளின் தயாரிப்புகள் தரமற்றவையாகவும், பில் செய்யப்பட்ட அளவை விட குறைவான எடை கொண்டவையாகவும் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடைகளில் இருந்து பொருட்களை வாங்கும்படியும் வார்டன்களில் பலர் வற்புறுத்தப்படுகின்றனர். தரமான உணவு வழங்குவதற்கு அரசு நிர்ணயித்த உணவுக் கட்டணம் போதுமானதாக இல்லையென்றாலும், வாய் மொழி உத்தரவு, நிர்ப்பந்தம் காரணமாக இந்த பிரச்னை இன்னும் மோசமாகும்.
Also Read : இண்டேன் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் அலட்சியப்போக்கு? Vels Exclusive
தரமற்ற பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனரை சந்தித்து கடிதம் கொடுத்தோம். TUCS அல்லது அருகிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் இருந்து அவர் பொருட்களை வாங்கச் சொன்னார். ஆனால், குறிப்பிட்ட கூட்டுறவு அங்காடிகளுடன் தொடர்புடைய நபர்கள், அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறி வார்டன்களை மிரட்டுகின்றனர்.” என்று அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையம் நான்கு மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளது, இன்னும் நிர்வாகியை நியமிக்கவில்லை என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆதி திராவிடர் நலத்துறை உயர் அதிகாரிகள், பிரச்சனையை வார்டன்கள் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், தங்களுக்கு ஏற்றதாக கருதப்படும் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யுமாறும், ஒரே இடத்தில் கொள்முதல் செய்யத் தேவையில்லை என்று தெரிவித்திருப்பதாகவும் கூறினர்.
With Inputs : The New Indian Express
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry