10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி! கருணை அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்க வலியுறுத்தல்!

0
183

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு ஆங்கிலப் பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. பொதுத் தேர்வுக்கு முன்பான காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வு போன்றவற்றில் இருந்து மாறுபட்டு பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

ஆங்கிலப் பாட திருப்புதல் தேர்வில், முதல் மூன்று கேள்விகள் இணைச்சொற்கள்(Synonyms) எழுதுமாறு கேட்கப்படும். அடுத்த மூன்று கேள்விகள் எதிர்ச் சொற்கள்(Antonyms) எழுதுமாறு வினாத்தாள் வடிவமைக்கப்படும். இதுவரையிலுமான பொதுத்தேர்வுகளில் இப்படித்தான் கேள்விகள் இடம்பெற்று வந்தன. எனவே, அதன் அடிப்படையிலேயே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகினர்.

ஆனால், இன்று நடைபெற்ற ஆங்கில பொதுத்தேர்வில், முதல் ஆறு கேள்விகளுமே Synonyms எழுதுக என்று கேட்கப்பட்டிருந்தது. Antonyms என்ற கேள்வியே இடம்பெறவில்லை. எல்லா கேள்விகளுக்கும் Synonymsஐயே பதிலாக எழுதலாம் என்று நினைத்தால், கேட்கப்பட்ட ஆறாவது கேள்வியில் Synonyms எழுதுவதற்கு இயலாது, காரணம் அந்தக் கேள்வியில் Antonyms மட்டுமே எழுத முடியும். இதனால் குழப்பம் அடைந்த மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் 3 வினாக்களுக்கு இணைச் சொற்களும், அடுத்த 3 வினாக்களுக்கு எதிர்ச் சொற்களும் எழுதியுள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கு மூன்று மதிப்பெண்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வினா எண் 28ல் ‘ரூட் மேப்’ எனப்படும், ஒருவர் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதை ஆங்கிலத்தில் மாணவர்கள் விடையாக எழுத வேண்டும். அந்தக் கேள்வியும் தவறாக கேட்கப்பட்டுள்ளது. இந்தக் குளறுபடிகளின் அடிப்படையில், 5 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Also Read: தரமற்ற பொருட்களை வாங்க நிர்ப்பந்தம்! அமைச்சர் பெயரால் மிரட்டல்! வேதனையில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி வார்டன்கள்!

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கல்வியாளரும், எழுத்தாளருமான தங்கம் மூர்த்தி, “இது கேள்வித்தாள் தயாரித்ததில் உள்ள குளறுபடியாகும். ஒரு கேள்வித்தாளை வடிவமைக்கும் போது வல்லுனர்கள் பலர் இதில் இடம் பெறுவது உண்டு. வல்லுனர்கள் குழு ஒரு மனதாக தேர்வு செய்த ஒரு கேள்வித்தாளைத்தான் அரசு பொதுத்தேர்வில் கேட்பது வழக்கம். இத்தனை வல்லுனர்கள் பாடுபட்டு எடுத்த கேள்வித்தாளில் பல தவறுகள் இருக்கிறதெனில் வல்லுனர்களின் தகுதிகள் தான் என்ன? அவர்கள் ஆங்கிலம் படித்தவர்கள் தானா?

‘ஆங்கிலத்திற்கு மூன்று மதிப்பெண்கள் அனைவருக்கும் வழங்கப்படும்’ என்ற அரசு அறிவிப்பு வந்தாலும் வரும். வரட்டும். மாணவர்களை மனக்குழப்பங்களுக்கு ஆளாக்கிய இந்த ‘அறிஞர்களுக்கு’ என்ன பரிசுகள் தரப்போகிறது அரசு? ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பல குளறுபடிகளை கேள்வித்தாள் தயாரிப்பவர்கள் உருவாக்குகிறார்கள். இன்று நடந்த ஆங்கில தேர்வு கேள்வித்தாள் குளறுபடிக்கு யார் பொறுப்பேற்பது?

Also Read : தமிழகத்தில் சொத்துவரி மீண்டும் 6% உயர்கிறது! ஏற்கெனவே பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!

35 எடுக்க வேண்டிய ஒரு மாணவன் 34 எடுத்தால் அவன் ஃபெயில் என்கிறது நமது தேர்வு நெறிமுறை.
மாணவன் ஃபெயில் என்றால் தவறாக கேள்வி தயாரித்த வல்லுனர் பாஸ் ஆவாரா? ஏற்கனவே ஆங்கிலம் என்றால் அரை கிலோ மீட்டருக்கு அப்பால் ஓடிப் போய் விடுகிற மாணவர்களிடம், தொடர்ந்து இப்படி குழப்பங்களை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

35 மதிப்பெண் எடுத்தால் போதும் என்கிற மாணவருக்கு இது ஒரு பொருட்டல்ல. 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற முனைப்போடு ஒரு முழு ஆண்டும் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவனோ, மாணவியோ என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை தேர்வுத் துறையில் எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
மாணவர்களின் மனவளம் காக்காத இந்தத் தேர்வுகள் தான் நம் கல்வியை எடைபோடும் கருவிகளா?” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry