தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லாத முதலமைச்சர்..! மதுவிற்பனைக்கு ரூ.600 கோடி இலக்கு! முதல்வரை விளாசிய ஆர்.பி. உதயகுமார்!

0
19
AIADMK criticises Chief Minister M.K. Stalin for not wishing people on Deepavali festival / File Image

சுனாமி, கஜா புயல், கொரோனா காலங்களில் கருணையின் அடையாளமாக அம்மாவின் அரசு இருந்தது. ஆனால் இன்றைக்கு கருணையே இல்லாத ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் விமர்சித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதல்வர் அனைவருக்கும்  பொதுவானவர். அனைத்து மதத் திருவிழாக்களுக்கும் வாழ்த்துக் கூற வேண்டும். தீபாவளிக்கு ஏன் வாழ்த்துக் கூறவில்லை?’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் விசுவநாதனும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  மழுப்பலான பதிலை ஸ்டாலின் கூறினார். தீபாவளிப் பண்டிகை என்றாலே கடவுளுடைய அருளாசி, தலைவர்களின் வாழ்த்துகளைத்தான் மக்கள் விரும்புவார்கள்.

மக்கள் பாடுபட்டு உழைத்து சேமித்த பணத்தில் புத்தாடை, பட்டாசு, பலகாரம் கிடைத்தன. ஆனால், முதலமைச்சரின் வாழ்த்து கிடைக்கவில்லை. மதச்சார்பற்ற அரசு என்றால் அனைத்து மதத்தினரின் திருவிழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். முதல்வர் பதவி என்பது ஓர் அரசுப் பதவி. அது அனைத்து மக்களுக்குமான பதவி. அப்படியான முதல்வரிடமிருந்து வாழ்த்துகளை மக்கள் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

Also Read : திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! 18ம் தேதி சூரசம்ஹாரம்! விரதம் தொடங்கிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

ஒவ்வொரு பகுதி மக்களும், தீபாவளிக்கு ஒவ்வொரு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வடநாட்டில்  ராமர் வனவாசம் சென்று நாடு திரும்பிய நாளை தீபாவளி என்கிறார்கள். தென்னாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி நாடு முழுவதும் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இந்தப் பண்டிகையை முதலமைச்சர் சீர்குலைக்கலாமா..? நம்பிக்கையைச் சிதைக்கும் வகையிலே வாழ்த்து கூறாமல் மௌனம் காப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு தனிநபராக நம்பிக்கை இருக்கிறதா?, இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால், பொது வாழ்விலே மக்களால் அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த நம்பிக்கைக்கு உரியவராக, எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக, அன்புக்குரியவராக, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும்.

தீபாவளி முடிந்துவிட்டது. அவர் வாழ்த்துச் சொல்ல மாட்டார். அது வேறு விஷயம். ஆனால், முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பவர் காட்டுகிற பாரபட்சத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை உணர்ந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  கருணை இல்லையா..? மக்களிடம் வேறுபட்டு இருக்கிறாரா..? என்பதெல்லாம் கேள்வியாக இருக்கின்றன.

Also Read : தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் ஆணையம் எதிர்த்தும் மோடி பிடிவாதம்! என்ன சொல்லப்போகிறது சுப்ரீம் கோர்ட்! What are electoral bonds?

இஸ்லாமிய சகோதரர்களுக்கும், கிறிஸ்துவ சகோதரர்களுக்கெல்லாம் இந்து மக்கள் இனிப்பு வழங்கி  தீபாவளி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறார்கள். பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு வகைகளைத் தயார் செய்ய இஸ்லாமிய, கிறிஸ்துவ, இந்து மக்களின் உழைப்பின் வடிவமாக சமதர்ம சமுதாயத்தின் வடிவமாகத்தான் புத்தாடையும், பட்டாசும், பலகாரமும் வெளிப்படுத்துகின்றன.

மக்கள் பாடுபட்டு உழைத்த பணத்திலேயே புத்தாடை கிடைத்தது, பாடுபட்டு உழைத்த சேமித்த பணத்திலே வெடி கிடைத்தது, பலகாரம் கிடைத்தது, ஆனால் முதலமைச்சர் வாழ்த்து மக்களுக்கு கிடைக்க வில்லையே? கடந்த ஆண்டு டாஸ்மாக்கில் 431 கோடி விற்பனையானது.  இந்த ஆண்டு 600 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற இந்த நாளுக்காவது நீங்கள் வாழ்த்து சொல்ல முன்வரலாமே… நீங்கள் முன்வர மாட்டீர்கள். அதற்குத் தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்குப் பரிசாகத் தருவார்கள்” என அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry