திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! 18ம் தேதி சூரசம்ஹாரம்! விரதம் தொடங்கிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

0
22
Yaga Salai Pooja held at Tiruchendur Temple on the occasion of Kanda Sashti festival

கலியுகக் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.  தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாகசாலை நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளினார்.

தங்க சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்

சஷ்டி மண்டபத்தில் காலை 7.30 மணிக்கு ஜெயந்திநாதர் – வள்ளி, தேவானை அம்மாளுக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்மாளுக்கு 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகமும் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள், கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்

Also Read : பலரும் அறியாத முருகனின் மகிமைகள்! கைமேல் பலன்கொடுக்கும் கந்தசஷ்டி விரதம்! Kandha Sashti Viratham!

கோவிலின் வளாகத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலின் வெளிவளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. 19ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நடக்கும் 7 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • நவம்பர் 13 ( திங்கட்கிழமை)      – கந்த சஷ்டி விழா தொடக்கம்
  • நவம்பர் 14 ( செவ்வாய்)             – முருகப்பெருமான் வேல் வாங்குதல்
  • நவம்பர்  15 ( புதன்)                 – சூரபத்மனுக்கு தூது விடுதல்
  • நவம்பர் 16 (வியாழன் )             – சூர்பத்மனுடான போர் தொடங்குதல்
  • நவம்பர்  18 ( சனி)                  – சூரசம்ஹாரம்
  • நவம்பர் 19 ( ஞாயிறு)              – திருக்கல்யாணம்

முருகன் கோவில்களில் காலை முதல் மாலை வரை அனைத்து நாட்களிலும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும்.  பக்தர்கள் ஆறு நாட்களிலும் கந்த புராணம் வாசிப்பார்கள், முருகப்பெருமானின் கீர்த்தனைகளைப் பாடுவார்கள், குறிப்பாக கந்த சஷ்டி கவசம் பாடுவார்கள். தினமும் சிறப்பு  அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, தீபாராதனை  நடைபெறும். சில கோவில்களில் முருகனுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.

கந்த புராணத்தின் படி, ஒரு காலத்தில் சூரபத்மன், சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரன் ஆகிய மூன்று அசுரர்கள் வான தேவதைகளுக்கு பெரும் தொல்லைகளை ஏற்படுத்தினார்கள். அவர்களை அழிக்க சண்முக பகவான் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து அவதாரம் எடுத்தார். முருகப்பெருமான்  பார்வதி தேவியிடம் இருந்து வேல் ஆயுதத்தை ஏற்றுக்கொண்டு, வீரபாகு தேவர் மற்றும் பிற தேவர்களுடன் சூரபத்மன் மற்றும் அவனது அரக்கர் படையுடன் போரிட திருச்செந்தூருக்கு சென்றார்.

போரின் போது முருகப்பெருமான் சிங்கமுகசுரத்தை சக்தி தேவியின் வாகனமாக மாற்றினார். சூரபத்மன் சண்டையிட்டுக் கொண்டு கடல் அடியில் மாமரமாக ஒளிந்து கொண்டு தப்பிக்க முயன்றான். முருகப்பெருமான் மாமரத்தைப் பிளந்து ஒரு பாதியை மயில் வாகனமாகவும், மற்றொரு பாதியை  சேவல் கொடியாகவும் மாற்றினார். அசுரர்களை அழித்ததற்கும், தேவர்களை விடுவித்ததற்கும் பலனாக ஆண்டுதோறும் பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry