ஜெ. உடன் கடும் சண்டை! கட்சியை விட்டு நீக்கியதாக டிராமா! கோடநாடு மர்மம்! வாஜ்பாய் ஆட்சி கவிழ்ப்பு! பாகம் – 2

0
140

கட்சியைவிட்டு தம்மை நீக்கியது பெயரளவுக்குத்தான் என்று கூறியுள்ள சசிகலா நடராஜன், வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்தது, ஜெயேந்திரர் கைது போன்ற விவகாரங்களில் தமக்கும், ஜெயலலிதாவுக்கும் பெரும் சண்டையே நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுடன் சசிகலாவுக்கு எப்படி அறிமுகம் கிடைத்தது? இருவருக்கும் இடையேயான பந்தம் எப்போது வலுப்பெற்றது? இரண்டாகப் பிளவுபட்டிருந்த அஇஅதிமுகவை இணைக்க சசிகலா என்ன செய்தார்? உள்ளிட்ட விவரங்களை முதல் பாகத்தில் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக சசிகலா சொல்லியவற்றை இப்போது பார்க்கலாம்.

Also Read: ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்! காரோட்டி தினகரன்! மனம் திறக்கும் சசிகலா நடராஜன்!  பாகம்-1

உடைகள் தேர்வில் கவனம்

போயஸ் கார்டனில் இருந்த 33 ஆண்டுகளில் அக்காவுக்குத் தெரியாமல் வெளியே எங்குமே போனதில்லை. வீட்டில் நான் இல்லை என்றால் உடனடியாக ஃபோன் செய்து எங்கே இருக்கிறேன் என்று கேட்டு தெரிந்துகொள்வார். அக்கா இல்லாமல் தனியாக நான் செல்லும் இடம் என்றால், அது Milan Jyothi ஷோரூம்தான்.  அங்கு சென்று அக்காவுக்குப் பிடித்த கரும்பச்சை நிற Garder Vareli புடவைகள் வாங்கி வருவேன். ரோலாகத்தான் புடவை மெட்டிரீயல் வாங்குவேன். இரண்டு இஸ்லாமிய டெய்லர்கள்தான் புடவை பார்டரில் எம்பிராய்டரி செய்து கொடுப்பார்கள். விலை உயர்ந்த நகைகளை அக்கா விரும்பமாட்டார். எப்போதுமே ஒரே டிசைனில் இரண்டு புடவைகள் வாங்குவோம். தான் புது புடவை கட்டும்போது, அதே டிசைன், கலரில் என்னையும் புதுப் புடவை கட்டச் சொல்லுவார்.

இளவரசி சமையலை விரும்பிய ஜெயலலிதா

நீர்கொழுக்கட்டை, வறுத்த வேர்க்கடலை, பச்சைப் பட்டாணி போன்றவை அக்காவுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுப் பயணத்தின்போது, வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி கொடுப்பேன், அக்கா விரும்பி சாப்பிடுவார்.  அக்கா மறைந்த பிறகு நீர்கொழுக்கட்டை, வறுத்த வேர்க்கடலை, பச்சைப் பட்டாணி சாப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன். அதேபோல் சுற்றுப்பயணம் செல்லும்போதும் அக்காவுக்கு ஃபில்டர் காஃபி தேவை. ஸ்டிராங்காகத்தான் குடிப்பார். எனவே எப்போது சுற்றுப்பயணம் சென்றாலும், காஃபி போடுவதற்குத் தேவையானவற்றை கொண்டு சென்று, அக்காவுக்கு காஃபி தயார் செய்து கொடுப்பேன்.  வீட்டுச் சமையல்தான் அக்கா விரும்பி சாப்பிடுவார். அண்ணியின்(இளவரசி) சமையல் அக்காவுக்குப் பிடிக்கும். குறிப்பாக அண்ணி செய்யும் கோவைக்காய் பொறியல், தக்காளி ரசம் அக்காவின் ஃபேவரைட் உணவு.

நாய் இறந்ததால் டெல்லி பயணம் ரத்து

செல்லப்பிராணிகள், குறிப்பாக நாய் என்றால் அக்காவுக்கு மிகவும் பிடிக்கும். 13 நாய்களை அவர் வளர்த்தார். காலை நடைப்பயிற்சியின்போது நாய்களை அழைத்துச் செல்வார். போயஸ் கார்டன் வீட்டுக்கு வருவதற்கு முன் நான் வளர்த்து, பின் என்னுடனேயே வந்த ஜுலி மீது அக்கா தனிப்பாசம் செலுத்துவார். அக்கா ஹைதராபாத் சென்றிருந்தபோது ஜுலி இறந்துவிட்டது. பயணத்திட்டப்படி, ஹைதராபாத்தில் இருந்து டெல்லி சென்று எல்.கே. அத்வானியை அக்கா சந்தித்திருக்க வேண்டும். ஆனால், ஜுலி இறந்த தகவல் கிடைத்தவுடன், டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பிய அக்கா, சடங்குகள் செய்து வீட்டின் ஒரு பகுதியிலேயே ஜுலியை அடக்கம் செய்தார்.

கோடநாடு எஸ்டேட் மர்மம்

சில சமயம் இரவு நேரங்களில் மகாபலிபுரம் கடற்கரையில் அக்கா நீண்ட நடைப்பயிற்சி செய்வார்.  மகாபலிபுரம் மற்றும் அங்குள்ள சிற்பங்கள் அக்காவை கவர்ந்தவை. ஆனாலும், கோடநாடு எஸ்டேட்தான் அக்காவின் ஃபேவரைட். அங்கிருக்குபோது, நடைப்பயிற்சி, படகுசவாரி போன்றவை அவரது விருப்பங்களில் அடங்கும். ஏப்ரல் 2017-ல் கோடநாடு எஸ்டேட் வீட்டில் நடந்த கொள்ளை, காவலாளி கொலை ஆகியவற்றின் பின்னணியில் உள்ள மர்மம் இன்னமும் விலகவில்லை.  குற்றவாளிகள் இருவர் வெவ்வேறு இடங்களில் விபத்தில் சிக்கினார்கள், ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார். இது சதிச்செயல்தான். அதிமுக அரசும் இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்கவில்லை.

ஜெ. உடனான உறவில் விரிசல்?

ஒரு நிமிடம் கூட நான் இல்லாமல் அக்கா இருக்கமாட்டார். ஒருசமயம் நான் சிறையில் இருந்தபோது உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இது தெரிந்து அதிர்ச்சி அடைந்த அக்கா, உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார். எனது விரல்களை பற்றியபடி, உடல்நிலை மற்றும் சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். வெளி உலகத்துக்காகவே அவர் என்னை விலக்கிவைத்தார். அப்போதும் நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தோம். என்னை விலக்கிவைத்தபோது, தி. நகர் இல்லத்தில் தங்குமாறு அக்காதான் சொன்னார். இது எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான். தினமும் ஃபோன் செய்வார். இரவு 8 மணிக்கு பேச ஆரம்பித்து, நள்ளிரவு வரைகூட பேசியிருக்கிறோம். அப்போது, அரசியல் நிலவரம் குறித்து அக்கா என்னுடன் விவாதிப்பார். அக்கா சொன்னபடிதான் மன்னிப்புக் கடிதமும் வெளியிட்டேன்.  வேலைப் பளு காரணமாக சோர்வாக இருந்தால், சிறுபிள்ளை போல அக்கா எனது மடியில் தலைவைத்து படுத்துக்கொள்வார். என்னை அவர் அம்மா ஸ்தானத்திலும் வைத்திருந்தார்.

மோடி விரும்பிச் சாப்பிட்ட அப்பம்

2015, ஆகஸ்ட் 7-ல் போயஸ் கார்டன் வீட்டுக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அவர் அக்காவின் மிகச் சிறந்த நண்பர். அவருக்காக தென்னிந்திய உணவு வகைகளை வீட்டிலேயே தயாரிக்குமாறு அக்கா சொன்னார். பிரதமர் மோடி அப்பத்தை திரும்பத் திரும்ப கேட்டு சாப்பிட்டார். சாப்பிட்டுக்கொண்டே இருவரும் ஜிஎஸ்டி பற்றி பேசினார்கள். ஜிஎஸ்டியை அக்கா ஏற்கவில்லை. பிரதமர் மோடி தவிர, எல்.கே. அத்வானி, ராஜிவ்காந்தி போன்ற தலைவர்களும் போயஸ்கார்டன் வீட்டுக்கு வந்துள்ளார்கள். அக்கா மீது அத்வானி மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.  பாஜக தலைவர்களிலேயே வாஜ்பாயை எனக்கு மிகவும் பிடிக்கும். 1980களிலேயே அவரது உரையை ரேடியோவில் கேட்பேன்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகச் சண்டை

1998-ம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளித்தபோதுதான் வாஜ்பாயை முதன் முதலாகச் சந்தித்தேன். 13 மாதங்களில் வாஜ்பாய் ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற அக்கா முடிவு செய்தது எனக்குத் தெரியாது. இருவரும் டெல்லி புறப்பட்டோம். சென்னை விமான நிலையத்தில், வெவ்வேறு வழியில் இருவரும் உள்ளே சென்றோம். பத்திரிகையாளர்களிடம், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை திரும்பப்பெற உள்ளதாக அக்கா சொல்லிவிட்டார். டெல்லி சென்றவுடன் டிவியில் பார்த்துதான் இதைத் தெரிந்துகொண்டேன்.  அதிர்ச்சியடைந்த நான், முடிவை மாற்றிக்கொள்ளுமாறு அக்காவிடன் வேண்டினேன், வாக்குவாதம் செய்தேன், சண்டையிட்டேன். ஆனாலும் அக்கா உறுதியாக இருந்ததால் ஆட்சி கவிழ்ந்தது

2003-ம் ஆண்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டபோதும் எங்களுக்குள் பிரச்சனை எழுந்தது. அவரை கைது செய்ய வேண்டாம் என ஒரு இரவு முழுவதும் அக்காவிடம் சண்டையிட்டேன். காலில் விழுந்து மன்றாடினேன். கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று சொன்னேன். ஆனால், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அக்கா உறுதியாகச் சொன்னார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பிராமணர்கள் வாக்கு அஇஅதிமுகவுக்கு எதிராகத் திரும்பியது.

ஹனுமன் சாலீஸா, செளந்தர்ய லஹரி பாராயணம்

எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் சாமி கும்பிடுவதை அக்கா தவிர்க்கமாட்டார். தினமும் காலையில் சுமார் 45 நிமிடங்கள் வழிபாடு செய்வார். ஹனுமன் சாலீஸா, செளந்தர்ய லஹரி ஆகியவற்றை பாராயணம் செய்வார். மிகவும் ஆச்சாரமான அவரது பாட்டியிடம் இருந்து, இந்த வழக்கம் அக்காவுக்கு வந்தது. பணி முடிந்து வீடு திரும்பும்போது, பாத்திரத்தில் தண்ணீர் தரவேண்டும். தலையிலும், காலிலும் தண்ணீர் தெளித்துக்கொண்டுதான் அக்கா உள்ளே வருவார்

அக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, பெருமாள், வெங்டாஜலபதி, முருகன் விக்ரகங்களுடன், பூஜைக்குத் தேவையான பொருட்களை தனிப் பெட்டியில் கொண்டு செல்வோம். பெருமாள்தான் அக்காவுக்கு இஷ்டமான தெய்வம். அவ்வப்போது ரமணீயம், பாகவதம் போன்றவற்றையும் அக்கா பாராயணம் செய்வார். அக்கா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்காக நான் அவற்றை பாராயணம் செய்தேன்.

ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள்

2016 செப்டம்பர் 22-ந் தேதி பெட்ரூமில் அக்காவும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, அக்கா வாஷ்ரூம் போய்விட்டு வந்தார். வெளியே வந்தவுடன் மயக்கமாக இருப்பதாக அக்கா சொன்னார், உடனடியாக நான் அக்காவிடம் செல்ல, அப்படியே என் மீது சாய்ந்தார். ஒரு கையில் அக்காவைத் தாங்கியவாறு, செக்யூரிட்டி அதிகாரிக்கும், டாக்டருக்கும் ஃபோன் செய்தேன். பின்னர் அக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மறுநாள் சாதாரணமாக இருந்த அவர், காவிரி நீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தார்.

டிசம்பர் 4-ந் தேதிவரை அக்காவுக்கு பெரிய பிரச்சனை இல்லை. முழுமையாக குணமடைந்த பிறகு 19-ந் தேதி வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என நான் நினைத்திருந்தேன். கோடநாடு சென்று ஓய்வெடுக்கலாம் என்று அக்கா சொன்னார். போயஸ் கார்டன் சென்று சில நாள் இருந்துவிட்டு, பிறகு கோடநாடு போகலாம் என்று அக்காவிடம் நான் சொன்னேன். 4-ந் தேதி அக்கா தயிர்சாதம் மட்டுமே சாப்பிட்டார். குறிப்பிட்ட இடைவெளியில் உணவு கொடுக்குமாறு டாக்டர்கள் சொன்னார்கள்.

மறுநாள் அக்காவுக்கு பிடித்தமாதிரி மருத்துவமனை கிச்சனில் இரண்டு சிறிய பன், ஃபில்டர் காபி தயார் செய்தேன். பன்னின் மேல் உள்ள பிரவுன் கலர் லேயரை அக்கா விரும்பி சாப்பிடுவார். பன்னையும், காஃபியையும் டிராலியில் எடுத்துக்கொண்டு அக்காவிடம் சென்றேன். அக்கா டிவியில் ஜெய் ஹனுமான் பார்த்துக்கொண்டிருந்தார். அக்காவின் தொடையில் டிவி ரிமோட் இருந்தது. நான் அதை எடுத்தேன். காஃபி கொடுக்கும் முன்பாக அக்காவுக்கு திடீரென பெருமூச்சு வாங்கியது. நான் டாக்டரை அழைக்க அவர் ஓடிவந்தார். நான் அக்கா, அக்கா என கத்தினேன். அப்போது அக்காவால் கண்களை திறக்க முடியவில்லை. உடனடியாக ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். பிறகு சிகிச்சை பலனின்றி அக்கா மறைந்தார் என சசிகலா கண்ணீர் மல்க கூறினார். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி இரண்டு டின்னர் பன், ஸ்டிராங் ஃபில்டர் காஃபியை வைத்து சசிகலா வழிபடுகிறார்.

Inputs from ‘The Week’

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry