விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

0
114

விருதுநகரில் பட்டியலின இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பிய திமுக நிர்வாகி ஹரிஹரன் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த, திமுக இளைஞரணி வார்டு அமைப்பாளர் ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், இதேபோல் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இளைஞர் நீதிக் குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மதுரையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர், “விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல், விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது” என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry