இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 33-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை.
இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஹமாஸ் உள்துறை, “காசா பகுதி முழுவதும் நேற்றிரவு வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல், காசாவின் முக்கிய மருத்துவமனைகளான அல்-ஷிஃபா மற்றும் இந்தோனேசியன் மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசி தாக்கின. கான் யூனிஸ், நுசிராத் மற்றும் ஜபாலியா அகதிகள் முகாம்களும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
குடியிருப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதால், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ரமல்லாவில் உள்ள பிர்செயிட் (Birzeit) பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிவளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர், பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், 45-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
Also Read : கொத்துக்குண்டுகளை வீசும் இஸ்ரேல்? 25,000 டன் வெடிகுண்டுகள் வீச்சு, குழந்தைகளின் மயானமாகும் காஸா!
இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதை அந்நாட்டு ராணுவ அமைச்சர் யோவ் கேலன்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர், “தரைவழியாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் ராணுவப் படைகள் காசா நகரின் மையப்பகுதியை அடைந்துள்ளது. அங்கு, ஹமாஸ்களை சுற்றி வளைத்து ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் குழு ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தற்போது தாக்கத் தொடங்கியுள்ளோம். சுமார் நூறு கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளை தகர்ப்பதற்காக இஸ்ரேஸ் ராணுவ பொறியாளர்கள் வெடி மருந்துக்களை பயன்படுத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
פעילות לוחמי ההנדסה בתוך צוותי הקרב הלוחמים בעזה, כוללת השמדת אמצעי לחימה של האויב, איתור, חשיפה ופיצוץ פירי מנהרות. עם הרחבת הפעולה הקרקעית ברצועת עזה, מסכלים הלוחמים את תשתיות הטרור של החמאס >> pic.twitter.com/2C8mAAAVOD
— דובר צה״ל דניאל הגרי – Daniel Hagari (@IDFSpokesperson) November 8, 2023
டோக்கியோவில் நடந்துவரும் ஜி7 கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நாடுகள், இஸ்ரேல்-காசா போரில் இஸ்ரேலை ஆதரித்துள்ளனர். ‘ஹமாஸை அடக்கும்விதமாக இஸ்ரேல் தற்காப்பு நடவடிக்கையாக போரை மேற்கொண்டுள்ளதாக’ கூறி இஸ்ரேலுக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்த அதேவேளையில், காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும்வகையில் ‘தற்காலிக போர் நிறுத்தம்’ தேவை என்பதை வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதை டோக்கியோ கூட்டம் வாயிலாக இஸ்ரேலிடம் வலியுறுத்தினர். தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள், முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை.
Also Read : தரவரிசையில் முதலிடம் பிடித்து சுப்மன் கில், சிராஜ் வரலாற்றுச் சாதனை! நெம்பர் – 1 அணியாக மிளிரும் இந்தியா!
முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடான மலேசியா, பாலத்தீனத்துக்கு நீண்ட காலமாக ஆதரவளித்து வருகிறது. இஸ்ரேலை மலேசியா இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கவில்லை மற்றும் இரு நாடுகள் தீர்வு (Two State Solution) நிறைவேற்றப்படும் வரை அத்தகைய அங்கீகாரம் இஸ்ரேலுக்கு வழங்கப்படாது என்று மலேசியா தெரிவித்துள்ளது. ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், அந்தக் குழுவை மலேசியா தண்டிக்காது என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார். பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வடக்கு, தெற்கு என்றில்லாமல் காசாவை இரண்டாகப் பிரித்து தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பிணைக்கைதிகள் 242 பேர் விடுவிக்கப்படும் வரை காசாவுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி 33-வது நாளை எட்டியுள்ள ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில், இதுவரை 10,328 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். 25,956 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் 1,405 பேர் பலியாகியுள்ளனர். 5600 பேர் காயமடைந்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry