விஸ்வரூபமெடுக்கும் போதை கலாச்சாரம்! இளைஞரை தாக்கி, சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கஞ்சா கும்பல்!

0
228

சென்னையில், பெரியமேடு எம்.வி பத்ரன் தெரு, பெரியண்ணன் மேஸ்திரி தெருவில் தனியார் உணவகம் மற்றும் சலூன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. எம்.வி. பத்ரன் தெருவில் உள்ள உணவகத்திற்கு நேற்று இரவு இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றார்.

Also Read : தமிழகத்தை உலுக்கும் புள்ளி விவரம்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு! தற்கொலையில் 2-வது இடம்!

அப்போது திடீரென அந்த உணவகத்திற்குள் புகுந்த 7 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல், சாப்பிட வந்த அன்சரை தாக்கியது. அத்துடன் உணவகத்திற்குள் இருந்த பொருட்களையும் தூக்கி எறிந்து அந்த கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டது. அதே கும்பல், அருகில் இருந்த சலூன் கடை பேனரைக் கிழித்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கியது.

இதுமட்டுமின்றி மாட்டுக்கார வீரபத்திரன் தெரு, பெரியண்ணா மேஸ்திரி தெரு கடைகளில் உள்ள CCTV கேமராக்கள், கடையின் ஷட்டர்களை இந்த கும்பல் சேதப்படுத்தியுள்ளது.
போதைக் கும்பல் தாக்கியதால் காயமடைந்த அன்சர், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், லோகேஷ், கபில், ராஜேஷ், கணேஷ், சதீஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். “தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப்பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை இளைஞர்களை எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்பதற்கு இக்காட்சிகளே உதாரணம். வெறும் பேச்சளவில் மட்டுமின்றி போதைப் பொருள் ஓழிப்பை உண்மையான அக்கறையுடன் காவல்துறை செயல்படுத்த வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry