அரியர் தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது! தமிழக அரசு ஆணைக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
10

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அரியர் தேர்வு எழுதாமல் எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்து முந்தைய அதிமுக அரசு அரசாணை பிறப்பித்தது. அதாவது பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலேபாஸ்ஆனதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவமாணவிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அத்துடன் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையும் மனுதாரர்கள் எதிர்த்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்றம், அரியர் தேர்வு ரத்து என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி இடைக்காலத் தடை விதித்தது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் விவரம் மற்றும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் விவரம் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரு துணை தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை, தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இறுதி பருவ தேர்வுகளையும், இடைப்பட்ட பருவ தேர்வுகளையும் நடத்தவில்லை என பல்கலைக்கழக மானிய குழு விதிகளை வகுத்துள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். மேலும் தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry