சென்னையில் டீசல் விலை ரூ.100ஐத் தாண்டியது! தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.105ஐ நெருங்குகிறது!

0
4

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டியது

பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியபோது, தமிழக அரசு 3 ரூபாய் விலையை குறைத்தது, இதன் பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு கீழ் விற்கப்பட்டுவந்த நிலையில், நாள் தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தி வந்தன. இதனால் தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. தொடர்ந்து 4-வது நாளாக விலை உயர்த்தப்பட்டுள்ளதால், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 104.22-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த வாரமே ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயைத் தொட்டுவிட்டது. திண்டுக்கல், கடலூர், உதகை போன்ற இடங்களில் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாயை கடந்து விற்பனையாகும் சூழலில், சென்னையில் மட்டும் 100 ரூபாயை நெருங்கி காணப்பட்டது. சென்னையில் இன்று காலை வரலாறு காணாத புதிய உச்சமாக டீசலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 33 காசுகள் அதிகரித்து ரூ.100.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 36 காசுகள் அதிகரித்து ரூ.100.02க்கு விற்பனையாகிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 34 காசு அதிகரித்து ரூ.104.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களைப் பொறுத்தவரை 2 தினங்கள் மட்டுமே விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. மற்ற அனைத்து நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டே வந்தது.

வரலாறு காணாத விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் விலைவாசி உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏனென்றால், அத்தியாவசிய பொருட்கள், சமையல் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவை கனரக வாகன போக்குவரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயிக்கப்படுகிறது. டீசல் விலை உயர்ந்து வருவதால், கனரக வாகன உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தும்போது, அது வாடிக்கையாளர்கள் மீதே தாக்கத்தை ஏற்படுத்தும். இதேபோல் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட  வாகனங்களின் வாடகையும் உயர்த்தப்படக்கூடும்.

இதனிடையே, மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.113.12 காசுகளாகவும், டீசல் லிட்டர் 104.00 ரூபாயாகவும் விற்பனையாகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.107.24 காசுகளாகவும், டீசல் லிட்டர் 95.97 காசுகளாகவும் உள்ளது.  

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry