12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! குமரிக் கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி!

0
38

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைய பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரிக் கடல் பகுதியை ஒட்டி (1.5 கி.மீ உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.

தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழையும் பெய்யக்கூடும்.

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வரும் 26 முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் வரும் 26-ந் தேதியை ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry