2.20 Minute(s) Read : மின்னஞ்சல்கள், உரைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பார்ப்பதில் இருந்துதான் பெரும்பாலானோருக்கு அன்றைய நாளே தொடங்குகிறது. இவற்றை தவறவிடக்கூடாது என்பதற்காக நம்மில் பெரும்பாலோர் கழிப்பறைக்கு தொலைபேசிகளை எடுத்துச் செல்கிறோம்.
சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை கோவிட் -19 மக்களுக்கு உணர்த்தியுள்ளது. சானிடைசர்களைப் பயன்படுத்துவது, பல முறை கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை பின்பற்றி இன்னமும் பலரும் சுகாதாரமாக இருக்கிறார்கள். ஆனால் அனைத்து சுகாதார நடைமுறைகளுக்குப் பிறகும், நீங்கள் நாள் முழுவதும் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்களை எடுத்துச் செல்கிறீர்கள் என்று சொன்னால் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.
இந்த பாக்டீரியாக்கள் உங்கள் தொலைபேசி அல்லது ஸ்மார்ட்போன்களில் உள்ளன. குறிப்பாக, உங்கள் ஸ்மார்ட்போன் நீங்கள் எடுத்துச் செல்லும் அசுத்தமான பொருட்களில் ஒன்றாகும் எனச் சொன்னால் அது மிகையாகது. ஒரு கழிப்பறை இருக்கையைப் போல பல கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை ஸ்மார்ட்போன் வைத்துக் கொண்டிருக்கும்.
NordVPN நடத்திய ஆய்வின்படி, 10-ல் 6 பேர், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தொலைபேசிகளை கழிவறைக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில், 61.6 சதவீதம் பேர் கழிப்பறை இருக்கையில் அமர்ந்தபடியே ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக கணக்குகளை பார்ப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மூன்றில் ஒரு பகுதியினர் (33.9%) தங்கள் அன்புக்குரியவர்களுக்கு செய்தி அனுப்புவது, அல்லது அவர்களுடன் பேசி குடும்ப நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள அந்த நேரத்தைப் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்.
Also Read : நீரிழிவுநோய் – சுக்கு என்ன தொடர்பு? வெறும் வயிற்றில் சுக்குத்தண்ணீர் குடிப்பதால்..! Benefits of Dry Ginger!
ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாதல் கெட்ட பழக்கமாக பார்க்கப்பட்டாலும், இந்தப் பழக்கம் ஸ்மார்ட்ஃபோன்களை கொடிய பாக்டீரியாக்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் இனப்பெருக்க இடங்களாக மாற்றிவிடுவதுதான் கொடுமை. மக்கள் கழிப்பறை இருக்கைகளில் தங்களை பிஸியாக வைத்திருப்பதால், பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள், அவர்களது கைகள் வழியாக ஸ்மார்ட்ஃபோனின் மேற்பரப்பில் நுழைகின்றன. நாள் முழுவதும் அந்த ஸ்மார்ட்ஃபோனை தொடர்ந்து பயன்படுத்துவதால் இந்த பாக்டீரியாக்களை நம் வாய், கண்கள் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் சென்றுவிடும்.
மொபைல் போன் திரைகளில் கிருமிகள் 28 நாட்கள் வரை வாழ முடியும் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. கழிவறை இருக்கைகளை விட ஸ்மார்ட்போன்களால் பத்து மடங்கு அதிக கிருமிகளை எடுத்துச் செல்ல முடியும் என்பது நிறுவப்பட்ட உண்மை. சுகாதாரக் கண்ணோட்டத்தில், ஸ்மார்ட்ஃபோன் தொடுதிரைகளை ‘டிஜிட்டல் யுகத்தின் கொசு’ என்று விவரிக்கும் தொற்று கட்டுப்பாட்டு நிபுணர் டாக்டர் ஹக் ஹைடன், தொலைபேசியே தொற்றுநோய்க்கான ஆதாரமாக மாறும் என்கிறார்.
தொலைபேசியை பயன்படுத்திவிட்டு நீங்கள் கழிவறையை விட்டு வெளியே வரும்போது, உங்கள் தொலைபேசியில் கிருமிகள் குடிகொண்டிருக்கும். அந்தத் தொலைபேசியை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எடுத்து பயன்படுத்தினால், உங்கள் மூலம் அவர்களுக்கு இலவசமாக கிருமிகள் பயணப்படும்.
கழிப்பறை இருக்கைகள் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் உள்ளிட்ட பல்வேறு தீங்கு விளைவிக்கும் கிருமிகளைக் கொண்டிருக்கலாம். இந்த நோய்க்கிருமிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, நோய்த்தொற்றுகள், ஃபுட் பாய்ஸன், புண்கள் போன்ற தோல் நோய்த் தொற்றுகள், சைனசிடிஸ் போன்ற சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் பிறச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
மருத்துவ ரீதியாக இதைச் சொல்வதென்றால், வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் E.Coli, தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் Staphylococcus, காசநோய் மற்றும் டிப்தீரியாவை ஏற்படுத்தும் Actinobacteria, வலிமிகுந்த சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் Citrobacter, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துவதாக அறியப்படும் Enterococcus போன்றவை கழிப்பறைக்கு எடுத்துச்சென்று வரும் தொலைபேசியில் குடியிருக்கும். இவைமட்டுமல்ல, Klebsiella, Micrococcus, Proteus, Pseudomonas and Streptococcus போன்ற பாக்டீரியாக்களும் தொலைபேசியின் தொடுதிரையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!
கழிப்பறையில் தொலைபேசியைப் பயன்படுத்துவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க வழிவகுக்கும் என்பதால், உங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாயில், சிரமத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இது மூல நோய், குத பிளவுகள் மற்றும் மலக்குடல் புரோலேப்ஸ் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கழிவறையில் செல்போனை பயன்படுத்துவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எப்படி என்றால், பரபரப்பான வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுக்கும் ஒரே இடம் கழிவறைதான். தொலைபேசியை கழிப்பறைக்கு எடுத்துச் செல்லும்போது, மூளைக்கு சிறிதளவுகூட ஓய்வு கொடுக்க முடியாது. ஓய்வின்றி தொலைபேசி மூலம் நீங்கள் உள்வாங்கும் தகவல்கள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்தபடி செல்போனை உபயோகிக்கும் பழக்கம், முதுகு வலியை ஏற்படுத்தலாம். இதனால் தசை விறைப்பு மற்றும் முதுகுவலி பிரச்சனை இருக்கலாம்.
தொலைபேசியை கழிவறைக்கு எடுத்துச் செல்லவே வேண்டாம். தொலைபேசி மட்டுமல்ல, கழிவறைக்கு நீங்கள் எடுத்துச் செல்லும் இயர் பட்ஸ், ஹெட் செட்ஸ் போன்ற இன்ன பிற கேஜெட்கள் தீங்கு விளைவிக்கும் கிருமிகளால் ஆரோக்கியக்கேட்டை ஏற்படுத்தும். எனவே, பொழுதுபோக்கைத் தவிர்த்து, ஆரோக்கியத்திற்கான சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது நல்லது.
தொலைபேசியை கழிப்பறைக்கு எடுத்துச் சென்று, அது க்ளோசெட்டில் விழுந்துவிட்டால்…? முக்கியமான அழைப்புகள், உரைகள், மின்னஞ்சல்கள், சேமிக்கப்பட்ட தகவல்கள் எல்லாம் கதம், கதம்தான். எனவே உங்கள் தொலைபேசிக்கு ஒரு இடைவெளி கொடுங்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry