ஐ.எம்.டி.பி. தரவரிசையில் சூர்யா டீம் செய்த தகிடுதத்தம்! ஜெய்பீம் முதலிடம் பிடித்தது எப்படி? VELS EXCLUSIVE!

0
251

3 minutes Read : சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் ஐ.எம்.டி.பி. தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது. ஆனால், இந்தப்படத்தால் எவ்வாறு முதலிடம் பிடிக்க முடிந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

IMDB என்பது Internet Movie Database ஆகும். இது மிகப்பெரிய இணையத் திரைப்பட தரவுத்தளம் ஆகும். இதில் சர்வதேச அளவில், திரைப்படங்கள், திரைப்பட செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், திரைப்பட டிரெய்லர்கள் உள்ளிட்டவை இடம்பெறும். 1990-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த நீதம் என்பவர் IMDB இணையதளத்தை தொடங்கினார். 1998-ம் ஆண்டு அமேசான் நிறுவனம் இந்த இணையதளத்தை வாங்கியது. இந்த இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் தங்களது மதிப்பெண்ணை, அதாவது ரேட்டிங்கை செலுத்தலாம்.

1990-ல் இந்த இணையதளம் தொடங்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பு வெளியான திரைப்படங்களும் ரேட்டிங்குக்கு வைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு 1972-ல் வெளியான காட் ஃபாதர், 74-ல் திரைக்கு வந்த காட் ஃபாதர்-2 போன்ற படங்கள் IMDB இணையதளம் தொடங்கியது முதலே ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. இதேபோல், 1994-ல் வெளியான தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்  திரைப்படமும் டாப் 5-ல் இருந்து வந்தது.

தற்போதைய நிலவரப்படி, ஜெய்பீம், The Shawshank Redemption, The Godfather, சூரரைப் போற்று, The Dark Knight(2008) ஆகிய திரைப்படங்கள் தரவரிசையில் முறையே ஒன்று முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனென்றால், இந்த இணையதளத்தில் நேர்மையாக வாக்களிப்பவர்கள், படத்தின் நிறை குறைகளை பதிவிடுவார்கள், அதற்கு ஏற்றார்போல ரேட்டிங் கொடுப்பார்கள்.

24/11/2021 இரவு வரை ஜெய்பீம் படத்துக்கு ரேட்டிங் கொடுத்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 706 ஆகும். இந்தப்படத்துக்கு 6,080 பேர் ஒரு ரேட்டிங்கும்(4.4%), 2,585 பேர் 8 ரேட்டிங்கும்(1.9%), 6,615 பேர் பேர் 9 ரேட்டிங்கும்(4.8%) கொடுத்துள்ளனர். 2 முதல் 7 ரேட்டிங் வரை கொடுத்தவர்களின் சதவிகிதம் மிகமிகக்குறைவு.

ஆனால், 1 லட்சத்து 20 ஆயிரத்து 312 பேர் 10க்கு 10 ரேட்டிங்(87.4%) கொடுத்துள்ளனர். ஒட்டுமொத்த சராசரியின்படி ஜெய்பீம் திரைப்படம் 10க்கு 9.5 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. The Shawshank Redemption திடைப்படத்துக்கு ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் ரேட்டிங் செய்திருக்கிறார்கள். ஆனால், மொத்த சராசரி ரேட்டிங் 9.3 என்பதால், இப்படத்தை பின்னுக்குத் தள்ளி ஜெய்பீம் முதலிடம் பெற்றிருக்கிறது.

திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகும்போது பெரிதாக எந்த ஏமாற்று வேலைகளையும் செய்ய முடியாது. ரசிகர்கள் கூட்டத்தை வைத்து எளிதாகக் கணிக்கலாம். ஆனால், இப்போது OTTயில் படங்கள் ரிலீஸாகின்றன. குறிப்பாக சூர்யா தனது படங்களை OTTயில் வெளியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். சில தோல்விப் படங்கள் காரணமாக, தியேட்டர் அதிபர்கள் படத்தை நினைத்த விலைக்கு வாங்குவதில்லை. கொரோனா போன்ற காரணங்களை அவர்கள் கூறுவதால், OOTக்கு படங்களை விற்கவேண்டிய நிர்ப்பந்தம் சூர்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.

தனது தயாரிப்பு அல்லது நடிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய்பீம் இப்படி 5 படங்களை அமேசான் நிறுவனத்திடம் சூர்யா விற்றுள்ளார். எனவே Digital Platform-ல் தன்னை முழுவதுமாக முன்னிறுத்தும் வகையில் சூர்யாவின் கவனம் IMDB நோக்கி நகர்ந்திருக்கிறது. (ரசிகர்கள் குறைவு என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்!)

IMDB இணையதளத்தில் மாநில மொழிப் படத்தை ரேட்டிங்கில் முதலிடத்திற்கு கொண்டு வருவதால் அமேசான் நிறுவனத்துக்கு சாதகம் ஏற்பட்டுவிடப்போவதில்லை. அப்படிச் செய்தால் அவர்களது நம்பகத்தன்மை கேள்விக்கு உட்பட்டதாகிவிடும். இங்குதான் சூர்யா தனது ஆதரவாளர்களை பயன்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது. ஏனென்றால், உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் மூலமாக தன்னை கவனிக்க வைப்பதன் மூலம், தனது மார்க்கெட் வேல்யூ, சம்பளத்தை அதிகப்படுத்துவது, மிகப்பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள் இருப்பதாக காட்டிக்கொள்வது போன்றவற்றை சாத்தியப்படுத்த முடியும் என சூர்யா உறுதியாக நம்புகிறார்.

அதுமட்டுமல்லாமல், IMDB ரேட்டிங்கை அதிகப்படுத்துவதன் மூலம், அடுத்துவரும் தனது படங்களை வாங்க OTT நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காண்பிக்கும், தொலைக்காட்சி உரிமம் அதிக விலைக்குப் போகும், சமூகத்தில் ஸ்டார் வேல்யூ பெருமளவு கூடும் என சூர்யா கணக்குப் போடுவதாக தெரிகிறது.

எனவேதான், IMDB ரேட்டிங்கில் தனது படத்தை முன்னணியில் கொண்டுவரும் வேலையை, சூரரைப் போற்று திரைப்படத்தில் இருந்தே சூர்யா தொடங்கிவிட்டார். எனவேதான் அப்படம் 9.1 ரேட்டிங்குடன் 4-வது இடத்தில் உள்ளது. இவரது முந்தைய அதிகபட்ச ரேட்டிங் பெற்ற படம் 24. 20,420 பேர் வாக்களித்தனர், 7.9 ரேட்டிங் பெற்றது.

களநிலவரப்படி, ரஜினி, விஜய், அஜித் ஆகியோரைவிட, சூர்யாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், இவர்கள் யாருடைய படங்களும் IMDB ரேட்டிங்கில் டாப் 10-ல் கூட வந்ததில்லை. 2015-ல் வெளியாகி பல மொழித் திரைகளை கட்டியாண்டு, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகமான பாகுபலிக்கே, 6 ஆண்டுகளில், ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர்தான் வாக்களித்துள்ளனர். அப்படம் 8 ரேட்டிங்கைத்தான் பெற்றுள்ளது. இப்படியிருக்கும்போது, ஜெய்பீம் வெளியாகி 20 நாளில், எப்படி 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் ரேட்டிங் கொடுத்தார்கள்? IMDB இணையதளத்தில் ரிஜிஸ்டர் செய்ய கட்டணம் கிடையாது. இதைப் பயன்படுத்தித்தான் தகிடுதத்தம் நடந்திருக்கலாம் என சந்தேகம் கிளம்புகிறது.

இதுகுறித்து திரைத்துறையைச் சார்ந்த ஒருவரிடம் பேசியபோது, OTTக்கு படத்தை கொடுத்துவிட்டால், புரமோஷனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என சூர்யாவுக்குத் தெரியும். ஆனாலும், இப்போது OTT வணிகமானது IMDB ரேட்டிங் அடிப்படையிலும் நடக்கிறது. குறைந்த முதலீட்டுப் படங்களை திரையரங்குகளுக்கு விற்று, கூட்டம் வராவிட்டால் காசு பார்க்க இயலாமல் போகலாம். ஆனால் OTTயிலோகையில காசு வாயில தோசைகணக்காக வியாபரம் முடிந்துவிடும். எனவே டிஜிட்டலுக்கு மவுசு கூடுவதால், Proxyஆக ரேட்டிங் கொடுக்கும் முறையை சூர்யா கையிலெடுத்திருப்பதாகவே தெரிகிறது.

தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், அகரம் பவுண்டேஷன் மூலம் பயன்பெற்றவர்கள் ஆகியோரைக் கொண்டு IMDB இணையதளத்தில் சூர்யா அதிக ரேட்டிங் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களின் கிராஃபுமே இதற்கு சாட்சி. Proxy Voting, Cooked Voting என பலவாறு சொல்வார்கள். எதுவாக இருந்தாலும், ரேட்டிங்கில் டாப் ஐந்தில் இவரது படங்கள் இடம்பெற்றிருப்பதால், OTT நிறுவனங்கள் அதிக விலைகொடுக்க இது வாய்ப்பாக அமையும். IMDB ரேட்டிங்கை அதிகப்படுத்தி விளம்பரம் செய்வதால், பார்வையாளர்கள் அதிகமாவார்கள்.

சூர்யா ரசிகர்களைவிட, அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிக வலுவாக இயங்குபவர்கள். அஜித்தும், விஜயும் தியேட்டர்களில் படம் வெளியாவதையே விரும்புகின்றனர். எனவேதான் IMDB இணையதள ரேட்டிங்கில் விஜய், அஜித் மட்டுமின்றி அவர்களது ரசிகர்களும் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. சமீபகாலமாக தியேட்டர்களில் வெற்றிப்படங்களை கொடுக்க முடியாததால், சூர்யா OTTஐ மட்டுமே நம்பியிருக்கிறார். நேர்மையான சினிமா காதலர்களை நம்பி பயனில்லை என்பதால், ஒரு குழுவை களமிறக்கி IMDB ரேட்டிங்கில் சூர்யா கவனம் செலுத்துகிறார். அசுரன், சர்பட்டா பரம்பரை, வட சென்னை போன்ற படங்களுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர் என்பதை IMDB இணையதளத்தில் பாருங்கள், உண்மை புரியும்என்று கூறினார்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*