இந்த பாகத்தில், பத்துப் பொருத்தம் வந்தது எப்படி? என்பதைப் பார்க்கலாம். இன்றைய காலத்தில் உசிலம்பட்டியில் உட்கார்ந்து கொண்டு உலக நாடுகளின் நேரத்தை நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியும். அந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது.
ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்படியல்ல. கடிகாரமே பயன்பாட்டிற்கு வராத காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதைவிட முக்கியமாக, அந்த நாட்களில் சாமானியர்களுக்கு ஜாதகம் எழுதி வைக்கும் பழக்கம் இல்லை. பெரும்பாலானவர்கள் பிறந்த மாதம், தேதியே தெரியாமல் இருப்பார்கள்.
அந்தக் காலத்தில் குழந்தை பிறந்த நேரம் சொல்லுங்கள் என்று ஜோதிடர்கள் கேட்டால் ‘சேவல் கூவி கொஞ்ச நேரத்துல புள்ள பொறந்துடுச்சி, கிழக்கே ரயில் போன உடனே குழந்த பொறந்துச்சி. பத்தரை மணி பஸ்ல ஏறி டவுனுக்கு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்த உடனே குழந்த பொறந்துடுச்சி’ இப்படியான பதில்கள்தான் பெரும்பாலும் வரும்.
இதுபோன்ற நேரத்தில் எதனை அடிப்படையாகக் கொண்டு பலன் சொல்வது? இக்கட்டான நேரத்தில் ஜோதிடர்களுக்கு பிரம்மஹஸ்திரம் போல் கைக்கொடுத்த விஷயம் தான் நட்சத்திரங்கள். சந்திரன் இரண்டே கால் நாள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். இதை வைத்தே நட்சத்திரங்களை கண்டுபிடித்து, ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற பெயர் வைத்தார்கள்.
Also Read : ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?
பெண்களின் நிலையோ வேறுமாதிரி. பிறந்த தேதி தெரியாமல், பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணித்த காலமும் உண்டு. ஜென்ம நட்சத்திரம் தெரிந்திருந்தால் அதனைக் கொண்டே பொருத்தம் பார்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட முறையே இந்த பத்துப் பொருத்தம். அன்றைய கால தேச வர்த்தமானத்திற்கு அது போதுமானதாய் இருந்தது. ஆனால் இன்று எல்லோருமே ஜாதகத்தை கணித்து
வைத்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் சிசேரியனுக்கு நேரம் குறிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்.
ஜனன ஜாதகம் கையில் இருக்கும்போது திருமணத்திற்கான ஏற்பாட்டினை செய்யும் பட்சத்தில் ஆண்-பெண் இருவரின் ஜாதகங்களை முழுவதுமாக ஆராய்ந்து, அவரவர் ஜாதகக் கட்டங்களில் உள்ள கிரகங்களின் அமைப்பு சரியாக உள்ளதா?, அவை இருவருக்கும் பொருந்தி உள்ளதா? என்பதை அவசியம் பார்க்க வேண்டும்.
ஜாதகப் பொருத்தம் பார்க்கும் விதம் :
திருமணப் பொருத்தம் என்று வரும்போது ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது 2, 4, 7, 8, 12 ஆகிய பாவங்கள்தான். ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாம் பாவம் என்பது குடும்ப ஸ்தானம் மற்றும் தன ஸ்தானம் ஆகும். நான்கு என்பது கற்பு ஸ்தானம் அல்லது தனி மனித ஒழுக்கம். ஏழாம் வீடு என்பது களஸ்திர ஸ்தானம் அல்லது வாழ்க்கைத்துணை. எட்டாம் பாவம் மாங்கல்ய ஸ்தானம் அல்லது ஜாதகர், கணவரின் ஆயுள் ஸ்தானம். பன்னிரெண்டு என்பது அயன சயன போக ஸ்தானம் அல்லது தாம்பத்ய சுகம் பற்றிச் சொல்லும் பாவம்.
Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?
இதில் நிறைய விதி, விதி விலக்குகள், சூட்சமங்கள் இருக்கின்றன. ஆணின் ஜாதகமாக இருந்தால் 7-ம் இடம், 7-ம் இடத்து அதிபதி மற்றும் சுக்கிரன், பெண்ணாக இருந்தால் 7-ம் இடம், 7-ம் இடத்து அதிபதியுடன் செவ்வாயின் நிலையை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். இதுதவிர இரண்டாம் திருமணத்தை குறிக்கும் 9 மற்றும் 11 ஆகிய பாவங்களையும் பார்க்க வேண்டும்.
மேலும் திருமணத்திற்கு ஆண், பெண் ஜாதகங்களை இணைக்கும் போது குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இருவருக்கும் நல்ல தசா, புத்திகள் வருகிறதா? என்பதையும் பார்க்க வேண்டும். அவயோக கிரகங்களின் தசா, புத்தி நடப்பில் இருந்தாலோ, அடுத்து வருவதாக இருந்தாலோ தவிர்ப்பது நல்லது. ஆண், பெண் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசி அதிபதிகள் நண்பர்களாக இருந்தாலே 40 சதவீத பொருத்தம் அமைந்துவிடும்.
தொடர்புக்கு :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry