காங்கிரஸ் செயல்பாட்டால் எதிர்காலத்தை நினைத்து அச்சம்! பாஜக-வுடன் கார்த்தி சிதம்பரம் திரைமறைவு பேச்சுவார்த்தை?

0
47

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸைப் போன்று, தனது அரசியல் எதிர்காலமும் சூனியமாகிவிடுமோ என்ற அச்சமே, அவர் இந்த முடிவுக்கு வரக் காரணம் என்று கூறப்படுகிறது.

தொழிலதிபர், விளையாட்டு ஆர்வலர் என அறியப்பட்ட கார்த்தி சிதம்பரம் 2014-ல் தேர்தல் அரசியலுக்கு வந்தார். 2014-ல் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தோல்வியடைந்த அவர், 2019-ல் அதே தொகுதியில் பாஜகவின் ஹெச். ராஜாவை தோற்கடித்து, நாடாளுமன்றத்தில் கால்பதித்தார். மாநில காங்கிரஸ் கமிட்டி தம்மை புறக்கணிப்பது, அகில இந்திய தலைமையின் பாராமுகம் ஆகியவற்றால் அவர் விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், காங்கிரஸ் எம்.பி. என முக்கிய பதவியில் இருந்தாலும், கட்சி, கூட்டணிக்கு எதிரான கருத்துகளை கார்த்தி சிதம்பரம் பொதுத்தளத்திலேயே வெளிப்படுத்தி வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அண்மையில் 32 துணைத்தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்திருந்தார். தை 1-ம் தேதியை திமுக தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறது, அதை ஏற்க முடியாது என அவர் பகிரங்கமாக பேசினார்.

வாக்குப்பதிவு எந்திரமே பாஜக வெற்றிக்கு காரணம் என பரவலாக பலரும் குறை கூறி வரும் நிலையில், கார்த்தி அதை திட்டவட்டமாக நிராகரித்தார். கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய கபில் சிபலுக்கு, அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள், ராஜீவ் காந்தியுடன் கொலையான குடும்பங்களுக்காக குரல் கொடுத்தது உண்டா? என்று மு.க. ஸ்டாலினை விமர்சித்தார்.

பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்குவது, நினைவு நாளுக்கு மாலை அணிவிப்பது என்ற சடங்கு அரசியலைத் தாண்டி செயல்பட்டால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும் என்று பேசினார். தாய்மாமன் கமல்ஹாசனை கூட்டணிக்கு அழைக்கிறேன் என வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண விவகாரத்தில் கே.எஸ். அழகிரியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இப்படி கட்சி, கூட்டணிக்கு எதிராக அவ்வப்போது கலகக்குரல் எழுப்பி வந்தாலும், பாஜகவையும், மத்திய அரசையும் கண்டிக்க, விமர்சிக்க அவர் தவறுவதில்லை. .சிதம்பரம் அரசியலுக்கு வந்த 1972 முதல் பெரும்பாலும் தேசிய அரசியலிலேயே இருந்து வருகிறார். அதேபோல, கார்த்தி சிதம்பரமும் தேசிய அரசியலை நோக்கியே பயணிக்கிறார். அப்படி இருக்கும்போது, அடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலை தூக்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

மாநில அரசியல் குறித்து அலட்டிக்கொள்ளாத கார்த்தி சிதம்பரம், தம் மீதான வழக்குகள், தமது அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நினைத்து கவலைப்படுவதாகத் தெரிகிறது. எனவே பாஜகவுடன், அவர் தரப்பு, திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவில் இணைந்தால், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.பி. பதவி பறிக்கப்படும். எனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக அரசு ஆதரவு எம்.பி.யாக மக்களவையில் செயல்படுவதா? அல்லது, மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக உறுதியளித்தால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைவதா? அல்லது காங்கிரஸில் இருந்துகொண்டே, மறைமுகமாக பாஜகவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதா? என்ற பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கும். சிதம்பரத்துக்கும் உடனான உறவு 1972-ம் ஆண்டில் துவங்குகிறது. 1996-ல் ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் அவர் தம்மை இணைத்துக்கொண்டார். அதிமுகவுடன் தமாகா கூட்டணி அமைத்ததை எதிர்த்து, 2001-ம் ஆண்டில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை தொடங்கினார். 2004-ம் ஆண்டு தமது கட்சியை அவர் காங்கிரஸுடன் இணைத்தார். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் காங்கிரஸுடன் பயணித்து வரும் ப.சிதம்பரம், கார்த்தியின் நடவடிக்கைக்கு சம்மதிப்பாரா? அல்லது, கள நிலவரம் அறிந்ததால், அவரே மகனை அனுப்பி வைக்கிறாரா? என காங்கிரஸ் தொண்டர்கள் விவாதித்து வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry