இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம், “கடந்த ஒரு வார காலமாக, கர்நாடகத்திற்கும் மராட்டியத்திற்கும் இடையே எல்லை தொடர்பாக பனிப்போர் நடந்து வருகிறது. 1960 ஆம் ஆண்டிலிருந்து நீண்டு வரும் இந்தச் சண்டை, இப்போது உக்கிரமடைந்திருக்கிறது.
தங்கள் மாநிலத்தின் நிலங்களை காக்க, ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு அரசுகள் மோதிக் கொள்வது விந்தையாக இருந்தாலும், நிலம் எத்தனை முக்கியமானது என்பதை இதிலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையும் 1956 இல் இருந்து நீடித்து தான் வருகிறது. கர்நாடகத்திலும் மராட்டியத்திலும் உள்ள உணர்ச்சியுள்ள அரசியல்வாதிகள் எவரும் தமிழகத்தில் இல்லாததின் விளைவு, மொழிவழிப் பிரிவினையின் போது தமிழகம் கிட்டத்தட்ட 85 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பெரும்பரப்பை இழக்க காரணமாக அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை இதுதான் தமிழகத்தின் நிலைமை.
Also Read : பன்னாட்டு நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி! தர மறுத்ததால் சாலையை சேதப்படுத்தி அட்டகாசம்!
கேரள-தமிழக எல்லையோர கிராமங்களில் கேரளா தன்னிச்சையாக டிஜிட்டல் ரீ சர்வே என்கிற பெயரில், தமிழக நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்கிறது என்று இரண்டு மாதங்களாக கத்திக் கொண்டிருக்கிறோம். வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும் இரண்டு முறை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.
எங்களது இரண்டாவது முறையிடல் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த போது, எல்லையோரங்களில் கேரளாவின் அனுபவத்தில் இருக்கும் நிலங்களுக்கு நாம் உரிமை கோர முடியாது என்று அமைச்சரின் முன்னிலையிலேயே வருவாய்த்துறை செயலாளர் கூறுகிறார்.
தமிழக-கேரளா எல்லையோரங்களில் இருக்கும் நிலங்களை அளக்கும் பொறுப்பில், அன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழக அதிகாரி ஒரு மலையாளி. (எங்களுடன் வந்திருந்த கட்டப்பனையைச் சேர்ந்த ஜான் என்பவரை, தன்னுடைய சேம்பருக்கு வந்து தன்னை தனியாக சந்திக்குமாறு அந்த மலையாள அதிகாரி அழைப்பு விடுத்தது தனிக்கதை)
தமிழகத்தின் எல்லையோரம் இருக்கும் வருவாய் நிலங்களில் உள்ள பட்டா எண்களை, மலையாள அதிகாரிகளும் அச்சடித்து வைத்துக் கொண்டு, அதற்கு சட்டரீதியான உருவம் கொடுக்கவே டிஜிட்டல் ரீ சர்வே என்பதாகும் என்று நாங்கள் எழுப்பிய குரல், நிச்சயமாக நம்முடைய முதல்வரின் காதுகளுக்கு சென்று சேர வாய்ப்பு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.
1956 மொழிவழி பிரிவினையில் தமிழகம் கேரளாவிடம் இழந்த பரப்பு 1400 சதுர கிலோமீட்டர். அதே அளவுள்ள பரப்பை, தற்போது கேரளா செய்துவரும் டிஜிட்டல் ரீ சர்வே மூலமாகவும் நாம் இழக்க நேரிடும் என்கிற எங்களுடைய அச்சத்திற்கு செவிமடுக்கத்தான் இங்கு யாருமில்லை.
தன்னுடைய நிலங்களை கேட்டு, மராட்டியமும் கன்னடமும் களத்தில் நின்று போட்டு வரும் சண்டையை இங்குள்ள அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
மராட்டியத்தில் உள்ள முக்கிய நகரங்களான சோலாப்பூர்,அக்கலகோட் போன்ற கன்னடம் பேசும் பகுதிகள், ஒரு கட்டத்தில் தானாகவே கர்நாடகத்துடன் இணையும் என்று கொக்கரிக்கிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.
ஆனால் தமிழகத்திலிருந்து வல்லடியாக கேரளாவிற்கு தூக்கிக் கொடுக்கப்பட்ட, தமிழ் அப்பாவிகள் வாழும், தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை எங்கள் பூமி. அதை நாங்கள் தமிழகத்தோடு இணைப்போம் என்று இத்தனை ஆண்டுகால சரித்திரத்தில் எந்த தமிழ் அரசியல்வாதி கூறி இருக்கிறார்?
வளமிகுந்த நெயாற்றின்கரை, நெடுமங்காடு, கொழிஞ்சாம்பாறை, அட்டப்பாடி, ஆரியங்காவு வனப்பகுதிகள், சித்தூர், பாலக்காடு, நிலம்பூரின் கிழக்குப் பகுதி, மறையூர் என கேரளாவிடம் நாம் இழந்த பகுதிகள் குறித்து பேச இங்கு எவரும் தயார் இல்லை என்பது எத்தனை பெருஞ்சோகம்.
Also Read : எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்!
கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்களையும், பெல்காம்,கார்வார்,நிப்பானி உள்ளிட்ட நகரங்களை கேட்டும் களத்தில் நின்று முண்டா தட்டுகிறார்கள் மராட்டிய அரசியல்வாதிகள்.
ஷோலாப்பூர்,அக்கலகோட்,ஜாட் உள்ளிட்ட நகரங்களையும், அதன் கீழ் வரும் 260 கிராமங்களையும் கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்டு முண்டா தட்டுகிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.
உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத்தட்டி இரண்டு மாநில அரசுகளும் நீதி கேட்டாலும், மறுபுறம் பென்ஷன்களையும், சிறப்பு மானியங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். சொத்து சேர்ப்பதில் குறியாக இருக்கும் தமிழகத்து அரசியல்வாதிகள், நாம் இழந்த பகுதிகளை குறித்து பேசாததின் விளைவு தான், இன்று தமிழகம் எதிர்கொண்டு வரும் அத்தனை நீர் பிரச்சனைக்கான காரணமும்.
கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், மொழி வழி பிரிவினையின் போது எங்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று ஆயுதம் எடுத்து போராடினார்கள். அந்தப் போராட்டத்தை நாம் ஆதரித்து குடகை தமிழகத்தோடு இணைக்க களத்தில் நின்றிருந்தால் இன்றைக்கு காவிரி சிக்கல் இல்லை.
Also Watch : ரவீந்திரன் துரைசாமி மன்னிப்பு கேட்டேயாகனும்…! #ADMK வை சீண்டினால் தக்க பதிலடி | ‘Amma’ Gopi
தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவோடு இணைக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும், கண்டும் காணாமல் இருந்துவிட்ட தமிழக அரசியல்வாதிகளால் தான், இன்றைக்கு முல்லைப் பெரியாறு நீர்ச்சிக்கல். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணைக்கு வரும், பாம்பாறுக்கு சிக்கலும் தேவிகுளம் தாலுகாவில் தான் வருகிறது.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காடு மற்றும் சித்தூர் தாலுகாக்களை மட்டும் தக்க வைத்திருந்தாலே, இன்றைக்கு பவானி, சிறுவாணியில் பிரச்சனை எதுவும் இல்லை.
1956 மொழிவழி பிரிவினையில் கேரளாவிடம் நாம் இழந்த 1400 சதுர கிலோமீட்டர் பரப்பு நம்மிடம் இருந்திருந்தால், குறைந்தபட்சம் 250 முதல் 300 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றிருக்கும்.
எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு, இப்போதாவது தமிழக கேரள எல்லையோரம் இருக்கும், தமிழக வருவாய் நிலங்களையும், வன நிலங்களையும் காப்பாற்ற வேண்டுமாறு தமிழக முதல்வரை இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.
Also Watch : மிரட்டும் காலநிலை மாற்றம் | பருவமழைக் காலத்தில் பனி | Alarming climate report for Chennai
மூத்த அமைச்சரும், தமிழக கேரள எல்லை சிக்கலை பற்றி புரிந்து கொண்டவருமான, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் உடனடியாக ஒரு குழு அமைத்து, எல்லையை ஆய்வு செய்ய பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாம் இழந்த பகுதிகளை மீட்க, சிறந்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வில்சன் தலைமையில் சட்டப் போராட்டத்தை நடத்தவும் தயாராக வேண்டும். நிலம் எத்தனை முக்கியமானது என்பதை காலம் நமக்கு உணர்த்தும்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry